அரச காணியை தனியார் கையகப்படுத்த முயற்சி

தடுத்து நிறுத்தி நியாயம் கேட்ட சாள்ஸ் MP

மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மருதமடு பகுதியில் மக்கள் பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருந்து தற்பொழுது இடம்பெயர்ந்து மீள்குடியேற முடியாத நிலையில் இருக்கும் அரச காணியை தனியார் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை வன்னி பாராளுமன்னற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் அவ் அரச காணிகளை அப்பகுதி காணியற்ற குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் பிரதேச செயலாளருக்கு பரிந்துரைத்துள்ளார்.

இவ் சம்பவம் தொடர்பாக பாதிபிற்குள்ளாகி வரும் மருதமடு கிராம மக்கள் தெரிவிக்கையில்

மன்னார் முசலி பிரதேசப் பிரிவிலுள்ள மருதமடு கிராம மக்கள் குடியிருந்த அரச காணியில் பிரச்சனை காலத்துக்கு முன்பு அதில் பரமப்பரையாக குடியிருந்து வாழ்ந்தனர்.

1990 ம் ஆண்டு இப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்றிருந்த நிலையில் தற்பொழுது அயல் கிராமத்தவர்களின் ஓரிருவர் அவ் காணியை அத்துமீறி கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

இவர்கள் அரச காணிக்கு அருகாமையிலுள்ள தங்கள் வயல் காணி உறுதியை காண்பித்துக் கொண்டு இந்த அரச காணியை தங்கள் வசமாக்குவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 14 ஏக்கர் காணியில் 16 குடும்பங்கள் வாழ்ந்த இந்த அரச காணிகளையே இவர்கள் அத்துமீறி தற்பொழுது கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும்

அதாவது ஒருவர் இந்த மொத்தக் காணியை மூன்று பேருக்கு ரகசியமான முறையில் விற்பனை செய்துள்ளதாகவும் இவர்கள் இப்பொழுது இவ் காணிகளை அடைக்க முற்பட்டபோதே பிரச்சனை இவ் மக்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் இடையே தலைதூக்கியுள்ளது.

அத்துடன் இந்த காணிப் பகுதியில் பெருந் தொகையான களிமண் குவித்து வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டி இவ் வாழ் மக்கள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உடனடியாக அவ்விடத்துக்குச் சென்று சம்பவ இடங்களைப் பார்வையிட்டதுடன் முசலி பிரதேச காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர்களையும் அவ்விடத்துக்கு அழைக்கப்பட்டு அவ் காணிகள் அரசாங்கத்துக்கு உரித்தானது என அடையாப்படுத்தப்பட்டிருந்த எல்லைகளையும் காண்பித்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் மருதமடு பகுதியில் காணிகள் அற்ற நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு அவைகளை பகிர்தளிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பிரதேச செயலாளரிடம் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(தலைமன்னார் விஷேட நிருபர்)

 

Fri, 08/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை