அமைச்சரவை உப குழுவின் அறிக்கை திங்களன்று அமைச்சரவைக்கு

நிதியமைச்சர் பசிலுடன் உப குழு பேச்சு

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழு அதன் அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக குழுவின் அங்கத்தவரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆசிரிய தொழிற்சங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சரவை உபகுழு ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்களுடன் இறுதிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் இன்றைய தினம் நிதியமைச்சர் பெசில் ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதி அறிக்கையை தயார் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க அந்த அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமது சம்பள முரண்பாட்டு நெருக்கடிக்கு அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுத்தருமானால் தொழிற்சங்க நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதேவேளை மேற்படி ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் யோசனைகள் உள்ளடங்கிய அறிக்கையை தயாரிக்கும் வகையிலான பேச்சுவார்த்தை யொன்று அமைச்சரவை உப குழுவின் அங்கத்தினர்களுக்கிடையில் நேற்று நடைபெற்றுள்ளது. ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் கடந்தகால ஒரு மாத காலத்திற்கு மேல் பணி பகிஷ்கரிப்பபை மேற்கொண்டுவருகின்றனர். தமது சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்து ஒன்லைன் மூலமான கற்பித்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதுடன் அதனால் மாணவர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 08/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை