செலுத்தப்படும் தடுப்பூசிகளின் தரம் தொடர்பில் அரசு விளக்கமளிக்க வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எமது நாட்டில் செலுத்தப்படும் தடுப்பூசிகளின் தரம் தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எழுப்பிய கேள்வியின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் கடந்த சில வாரங்களாக கொவிட் வைரஸ் நோய் பரவல், தொற்றாளர்கள் மற்றும் இறப்பு ஆகியவற்றின் பரவல் திடீரென அதிகரித்துள்ளது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அவசர பிரச்சினை என்பதால், பின்வரும் கேள்விகளுக்கு உறுதியான பதில்களையும் விளக்கங்களையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

அத்துடன் மற்றொரு கொவிட் அலை உருவாகும் சூழலில் கொவிட் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட விதிமுறைகளை தளர்த்துவது பொருத்தமானதா? என்பதை தெரிவிக்க வேண்டும். குறிப்பாக பஸ்வண்டிகள் மற்றும் புகையிரதங்களில் பயணிகள் சமூக இடைவெளியை பேணுவது தொடர்பில் தங்களுக்கு பொறுப்பேற்க முடியாது என சுகாதார பணிமனையின் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்திருக்கின்றார். அவரின் இந்த கூற்றை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா?

குழந்தைகளுக்கு இன்னும் கொவிட் தடுப்பூசி போடப்படாததால், நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றது. சர்வதேச நாடுகளில் 12வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்குதடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பித்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் எமது நாட்டில் சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் என்ன என்பதை சபைக்கு அறிவிக்கவேண்டும்.

குறிப்பாக எமது நாட்டில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசிகளின் சக்தி தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதேபோன்று இஸ்ரேல் அரசாங்கம் 60வயது மேற்பட்டவர்களுக்கு 3ஆவது கட்ட தடுப்பூசியை வழங்கவும் தீர்மானித்திருக்கின்றது. அதனால் வெளிவரும் பல்வேறு வைரஸ் வகைகளுக்கு முகம்கொடுக்கும் வகையில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன? என்பதை அறவிக்கவேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 
Wed, 08/04/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை