கடன்களுக்கான தவணையை உரிய நேரத்தில் செலுத்தியது பெரும் வெற்றியாகும்

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா

கொரோனா வைரஸ் பாதிப்பு சூழ்நிலையில் உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ள நிலையில் அரசாங்கமானது செலுத்த வேண்டிய கடன் தவணையை உரிய காலத்தில் செலுத்தியுள்ளமை அரசாங்கம் பெற்றுக் கொண்ட பெரும் வெற்றியாகும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர்,

கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகில் செல்வந்த மற்றும் அதிகாரம் படைத்த நாடுகள் பொருளாதாரத்தில் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.இலங்கையிலும் அதுபோன்ற சூழ்நிலை நிலவும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வெற்றிகரமாக செயற்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற நிலையில் தடுப்பூசி நடவடிக்கைகள் மற்றும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.

எதிர்க்கட்சியினர் நாட்டை மூடுமாறு தெரிவித்துவரும் நிலையில் நாட்டை மூடி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. நாட்டு மக்கள் தற்போது தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.அவர்களுக்குத் தேவை தடுப்பூசியை பெற்றுக்கொண்டு இயல்பு வாழ்க்கையை ஆரம்பிப்பதே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Wed, 08/04/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை