ஆப்கான் மீட்பு விமானத்தில் பெண் குழந்தைப் பிரசவம்

மீட்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட விமானத்திலேயே, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் பெண் குழந்தையை பிரசவித்துள்ளார்.

விமானம் ஜெர்மனியில் தரையிறங்கியதும் அவருக்குக் குழந்தை பிறந்தது என்று அமெரிக்க விமானப்படை தெரிவித்தது.

கட்டாரில் இருந்து ஜெர்மனிக்குச் செல்லும் வழியில் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 28,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் குறைந்த காற்று அழுத்தம் இருந்ததால் பெண்ணுக்குச் சிக்கல்கள் ஏற்பட்டன.

அதனால் விமானி விமானம் பறக்கும் உயரத்தைச் சற்றுக் குறைத்து, காற்றழுத்தம் உயர உதவினார். ஜெர்மனியைச் சென்றடைந்தவுடன், மருத்துவ ஊழியர்கள் விமானத்திற்கு விரைந்தனர். அவர்கள், அந்தப் பெண்மணி பாதுகாப்பாகக் குழந்தையை ஈன்றெடுக்க உதவினர்.

பின்னர் குழந்தையும், அதன் தாயாரும் மருத்துவ வசதிக்கு அனுப்பப்பட்டனர். இருவரும் தற்போது சீரான நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது.

Tue, 08/24/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை