கொவிட் தொற்று; வீடுகளில் சிகிச்சை பெறும் 26,173 பேருக்கு பூரண சுகம்

சுமார் 900 வைத்தியர்கள் கடமையில்-Dr. அயந்தி கருணாரத்ன தெரிவிப்பு

நாடுமுழுவதும் வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களில் 26,173 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதுடன் 9,606 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் வீடுகளில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அயந்தி கருணாரத்ன தெரிவித்தார்.

இதற்காக தற்போது 900 வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும், இவ்வார இறுதியில் இந்த எண்ணிக்கையை 1,500 ஆக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் வைத்தியர் அயந்தி கருணாரத்ன தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அறிகுறிகளற்ற கொவிட்-19 தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் முறைமை கடந்த ஜூன் மாதம் களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நாடுமுழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வீடுகளில் சிகிச்சையளிக்கப்பட்ட 26,173 தொற்றாளர்களில் 370 தொற்றாளர்களை மாத்திரமே வைத்தியசாலைகளில் அனுமதிக்க வேண்டியேற்பட்டது. இது நூற்றுக்கு 1.4 சத வீதமாகும்.

இதேவேளை தற்போதும் (நேற்று 23 வரை ) 9,606 கொவிட் -19 தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்படுகிறது. இவர்களில் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 1883 பேரும் களுத்துறையைச் சேர்ந்த 1712 பேரும் உள்ளடங்குகின்றனர். ஏனையோர் நாட்டின் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

வீடுகளிலிலேயே சிகிச்சையளிப்பதற்கு பொருத்தமான தொற்றாளர்கள் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளால் தெரிவு செய்யப்படுகின்றனர்.

இதன்போது தனி அறை வசதி, தொலைபேசி வசதி உள்ளிட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். இவ்வாறு வீடுகளில் சிகிச்சையளிக்கப்படும் நோயாளர்களுடன் வைத்தியர்கள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்குவர் என்றார்.

Tue, 08/24/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை