அமெரிக்க உளவு அறிக்கையில் உறுதியான முடிவு இல்லை

கொவிட்-19 நோய்ப்பரவல் எவ்வாறு ஆரம்பித்தது என்பதற்கான ஆய்வில் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து போதிய தகவல் பெறாதது ஒரு காரணம் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொவிட்-19 நோய்ப்பரவல் எவ்வாறு ஆரம்பித்தது என்பதைக் கண்டறிய, ஜனாதிபதி ஜோ பைடன் 3 மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டார். கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதா, சீன ஆய்வுக்கூடம் ஒன்றிலிருந்து கசிந்ததா ஆகிய சாத்தியங்கள் ஆராயப்பட்டன.

உலக சுகாதார அமைப்பு இவ்வாண்டுத் தொடக்கத்தில் மேற்கொண்ட விசாரணையில் எதுவும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

சீன ஆய்வுக்கூடங்கள் குறித்து இரண்டாம் கட்ட விசாரணை நடத்த அமெரிக்கா கோரியது. இருப்பினும், சீன அதிகாரிகள் அந்தச் சாத்தியத்தை நிராகரித்துவிட்டனர்.

இந்நிலையில், வைரஸ் சீன ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்ததற்கான சாத்தியத்தை மேலும் ஆராய நெருக்குதல் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த ஆய்வு அறிக்கையின் சுருக்கம் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளது. எனினும் இந்த அறிக்கையை விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று சீனா நிராகரித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் 2019 இறுதியில் முதல் முறை கண்டுபிடிக்கப்பட்ட கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உலகெங்கும் நான்கு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல நாடுகளும் போராடி வரும் நிலையில், இது எவ்வாறு தோன்றியது என்பதை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நோய் பற்றிய அமெரிக்காவின் உளவு அறிக்கை கடந்த திங்கட்கிழமை ஜோ பைடனிடம் வழங்கப்பட்டது.

Fri, 08/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை