பாகிஸ்தானில் மந்த நிலையில் தொழிற்சங்க செயற்பாடு

தொழில் பாதுகாப்பற்ற நிலையில் ஊழியர்கள் குழந்தை தொழிலாளர்கள்

பாகிஸ்தானில் தொழிற்சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு வளர்ச்சி அடைவதற்கான சூழல் இல்லாத நிலையில் தொழிலாளர்கள், ஊழியர்களின் உழைப்புக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படுவதில்லை. நாட்டில் பள்ளி செல்ல வேண்டிய சிறுவர் சிறுமியர் கொத்தடிமைகளாகவும், நெருக்கடியான சூழலிலும் வேலை செய்ய விடப்படுகிறார்கள் என்று பாகிஸ்தான் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் அன்ட்ரோலா கம்ரினா இது தொடர்பாக பேசுகையில், பாகிஸ்தானில் 30 இலட்சம் சிறுவர் சிறுமியர் குழந்தை வேலையாட்களாக பணிபுரிந்து வருவதாகவும் தொழிற்சங்க உறுப்பினர்களாக உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை ஐந்து சத வீதத்துக்கும் குறைவு என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி. எஸ். பி. பிளஸ் சலுகையைப் பெறும் நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது. இதன் பொருட்டு பாகிஸ்தான் 27 நிபந்தனைகளுக்கு உடன்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம உரிமை மற்றும் பாதுகாப்பு என்பது அவற்றில் ஒன்றாகும்.

பாகிஸ்தான் தொழிலாளர் குவாமி இயக்கத்தின் தலைவர், தொழிலாளர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசுக்கு அரசியல் உறுதிப்பாடு இல்லை என்றும் கைத்தொழில் அதிபர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசாங்கம் தொழிலாளர்களுக்கு சிறந்த சூழல்களை ஏற்படுத்திக்கொடுக்கவும் ஏழைத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவுமான அரசியல் தீர்மானத்தை எடுக்க முடியாத நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார். ஜி. எஸ். பி. பிளஸ் உடன்படிக்கையின் பிரகாரம் எல்லா ஊழியர்களுக்கும் சமூக பாதுகாப்பு அட்டைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் பத்து சத வீதமானோருக்கும் குறைவானவர்களுக்கே அவை வழங்கப்பட்டிருப்பதாகவும் இவர் மேலும் கூறியுள்ளார்.

நாட்டில் தொழில் வாய்ப்பின்மை அதிகரித்துக் காணப்படுவதால் வேலை கொள்வோர் தீர்மானிக்கும் சம்பளத்துக்கும் நிபந்தனைகளுக்கும் ஊழியர்கள் உட்பட வேண்டியிருப்பதாகக் குறிப்பிடும் சிந்து மாகாணத்தின் மக்கள் தொழிலாளர் பணியகத்தின் தலைவர் ஹபீப் ஜுனைதி, வேலை கொள்வோர் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை சேர்ப்பதையே விரும்புகின்றனர் என்றார்.

நாட்டில் 11 மில்லியன் சிறுவர் சிறுமியர் வீடுகளிலும் விவசாய காணிகளிலும் வேலை செய்து வருவதாகவும் மேலும் ஒரு தொகையினர் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணியாற்றி வருவதாகவும் மனித உரிமை குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Thu, 08/05/2021 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை