பெண் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக பாக். பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஆவேசம்

தென்கொரியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதுவரின் 27வயதான மகள் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து வல்லுறவு குற்றவாளிகளுக்கு பகிரங்க தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த இந்த உறுப்பினர்கள், சிறுவர் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டுமானால் எல்லா வன்புணர்வு குற்றவாளிகளையும் பொது இடங்களில் தூக்கிலிடுவதை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஏகோபித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வல்லுறவு தொடர்பான சம்பவங்களை மீளாய்வு செய்வதற்கு பாராளுமன்றக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென கோரியுள்ள 69 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் வல்லுறவுக்கு எதிராக உடனடியாக சட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

தென்கொரியாவுக்கான முன்னாள் தூதுவரின் மகளான நூர் முகாதாம். அவரது சிறுவயது நண்பரான இளைஞரால் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், வலி தாங்க முடியாத அப்பெண் ஜன்னல் வழியாகக் கீழே குதித்து தப்பியோட முயன்ற போது அவர் மீண்டும் வீட்டுக்குள் இழுத்துவரப்பட்டு கடுமையாகக் தாக்கப்பட்டு கழுத்தறுக்கப்பட்டதாகவும் அசோசியேட்டட் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. இவரைக் கொலை செய்ததாகக் கருதப்படும் ஸாஹிர் ஜபார் ஒரு செல்வந்த தொழிலதிபரின் மகனாவார். ஜபாரை மணம்புரிய அப்பெண் மறுத்ததே இக்கொடூரக் கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். செல்வாக்குள்ள தொழிலதிபரின் மகன் என்பதால் அவரைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசெம்பர் மாதம் பாகிஸ்தான் ஜனாதிபதி வல்லுறவுக்கு எதிரான ஒரு கட்டளைச் சட்டத்தைப் பிறப்பித்தார். இதன் பிரகாரம் விசேட நீதிமன்றங்களின் ஊடாக விரைவாக தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும் என்றாலும் அது இன்னும் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறவில்லை.

பாகிஸ்தானில் வருடாந்தம் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் கொல்லப்படுவதாகவும் பல சம்பவஙகள் வெளியே தெரியவருவதில்லை என்பதோடு அங்கு கௌரவக் கொலைகள் நடப்பதாகவும் பெரும்பாலும் பெண்ணின் அப்பா அல்லது சகோதரர்களே இக்கொலைகளைச் செய்வதாகவும் ‘ஹியூமன் ரைட் வொட்ச்’ தெரிவித்துள்ளது.

Thu, 08/05/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை