நீரேந்து பகுதிகளை பாதுகாக்க முன்னுரிமை வழங்குங்கள்

நீர்ப்பாசன சபை அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

நாடளாவிய ரீதியில் நீரேந்து பகுதிகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறும் அது இன்றைய அவசர தேவை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார , நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

நாடு முழுவதும் மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு இணையாக நீரேந்து பகுதிகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

குடிநீர் பற்றாக்குறையால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், தேவையான குடிநீர் திட்டங்களை வெளிநாட்டு உதவி அல்லது மானியங்களாகப் பெற்று அதற்கான தீர்வுகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். புதிய தாவரங்கள் மற்றும் செடிகளை நடுவதன் மூலம் நீரேந்து பகுதியை பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சுடன் இணைந்து ஒரு முறையான திட்டத்தை உருவாக்குமாறு சுற்றாடல் அமைச்சிற்கு பிரதமர் அறிவுறுத்தினார். குடிநீர் விநியோக செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்க முடியும் என்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் இதன் போது தெரிவித்துள்ளனர். 

தற்போதைய அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளில் குடிநீர் விநியோகத்திற்கு முன்னுரிமை அளித்து பட்ஜெட்டில் அதிக நிதி வழங்கியதற்காக குடிநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். 2025 இல் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தை நாடளாவிய ரீதியில் செயற்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.   அமைச்சின் செயலாளர் டொக்டர் பிரியத் பந்து விக்ரம, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவர் நிஷாந்த ரணதுங்க மற்றும் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள்.

Thu, 08/05/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை