வடக்கிலும் 2,000 ரூபா கொடுப்பனவுகள் தயார்

-அரச அதிபர் மகேசன் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் 2,000 ரூபா கொடுப்பனவை பெற 57 ஆயிரம் குடும்பங்கள் தகுதி பெறுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டைத் தற்காலிகமாக மூடியமை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவைச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது தொடர்பான அறிவுறுத்தல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. நிவாரணம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் தொடர்பில் கணிப்பீடுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபரங்கள் திரட்டப்பட்ட பின்னர் கொழும்புக்கு அனுப்பவுள்ளோம்.

விரைவில் நிவாரண நிதியை கையளிக்கக்கூடியதாக இருக்கும். இதனைப் பெறுவதற்கு 57 ஆயிரம் குடும்பங்கள் தகுதி பெற்றிருப்பதாக கருதப்படுகிறார்கள். இதில் சில மாற்றங்கள் ஏற்படலாம். தற்போதுள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதற்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அவற்றுக்கான அனுமதியை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பலரும் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு வருகின்றனர். இது தொடர்பாக நாம் கலந்தாலோசித்து முடிவொன்றை எடுப்போம் என்றார்.

Wed, 08/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை