மாகாணங்களுக்கிடையில் 110 ரயில்கள் சேவையில்!

புகையிரத திணைக்கள முகாமையாளர் தகவல்

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து சேவை நேற்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டது. காலை மற்றும் மாலை அலுவலக சேவைக்காக 110 புகையிரதங்கள் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்படுவதாக  புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையிலான புகையிரத போக்குவரத்து சேவை தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்து சேவைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவையினை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கிடையில் புகையிரத போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, காலை 4.30 மற்றும் காலை 5 மணிக்கு கண்டி- கொழும்பு கோட்டைக்கு இரண்டு புகையிரங்களும், காலை 4.30 மணிக்கு பெலியத்தை - மருதானை, காலை 5 மணிக்கு காலி - மருதானை வரை ஒரு புகையிரதம் சேவையில் ஈடுப்படும். அத்துடன் சிலாபம் ,மஹவ ஆகிய பகுதிகளிலும் இருந்து காலை அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடும்.

மேலும், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பொதுப்பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்துவது அவசியமாகும் என்றார்.

 

Tue, 08/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை