சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்ற சிறிய நாடுகளுக்கு ஒரு வருட சலுகை காலம் தேவை

அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் கோரிக்கை

உலகில் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுவரும் கடன் பெற்றுள்ள நாடுகளுக்கு ஒருவருடம் சலுகைக்காலத்தை வழங்க சர்வதேச நிதி நிறுவனங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

‘ஏ20’ என்ற தொனிபொருளில் இணைய வழியின் ஊடாக பங்களாதேஷ் ஏற்பாடு செய்திருந்த பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கொவிட் தொற்றால் ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடிகளுக்கு சர்வதேச நிதி நிறுவனங்களை போன்று நாமும் தீர்வுகள் குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. உலகில் பிரதான நிதி நிறுவனங்களான ஏ.பி.ஐ., உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட முக்கிய நிதி நிறுவனங்களில் சிறிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் பெற்றுக்கொண்டுள்ள கடன்களுக்கு ஓராண்டு சலுகைக்காலத்தை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தற்போதை உலகளாவிய தொற்று பரவல் சூழலில் சிறிய பொருளாதாரத்தை கொண்ட நாடுகளுக்கு சலுகைகளை அளிப்பதன் ஊடாகவே எதிர்காலத்தை நோக்கி நகர முடியும்.

இதேவேளை, சர்வதேச கடன்களை செலுத்துவதில் இலங்கைக்கு எவ்வித சிக்கல்களும் இல்லை. கடந்த காலத்தை காட்டிலும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. முதல் காலாண்டில் 4.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை நாம் எட்டியிருந்தோம்.

இரண்டாம் காலாண்டில் இந்த வளர்ச்சி வேகம் சற்று குறைவடையும். அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷவின் வருகையுடன் வேகமாக எமது திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Mon, 07/12/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை