பாகிஸ்தான் ஊடகவியலாளர் கைது, சித்திரவதை பஞ்சாப் ஊடகவியலாளர்கள் உண்ணாவிரதம்

ஒரு பாகிஸ்தானிய பத்திரிகையாளரைக் கைதுசெய்து பஞ்சாப் பொலிசார் அவரை சித்திரவதைக்குள்ளாக்கியிருப்பதைக் கண்டிக்கும் முகமாக பஞ்சாப் மாநில ஊடகவியலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊடகவியலாளர்களும் பாகிஸ்தான் சரைக்கா கட்சியும் கூட்டாக ஏற்பாடு செய்திருக்கும் இப்போராட்டம் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் பொங் பொலிஸ் நிலையத்துக்கு வெளியே நடைபெற்றது.

இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள 'டோன்' பத்திரிகை, அஸ்கர் இந்தார் என்ற இப்பத்திரிகையாளர் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இலஞ்ச ஊழல் தொடர்பாக தகவல்களை சேகரித்து வெளியிட்டதையடுத்தே போலி முறைப்பாட்டின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளானதாகவும் நகங்கள் பிடுங்கி எறியப்பட்டதாகவும், கண்கள் பாதிப்பு அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்களின் எதிர்ப்பையடுத்து மாகாண பொலிஸ் அதிகாரி சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அஸ்கர் விடுவிக்கப்படுவார் என்றும் உறுதியளித்துள்ளார்.

நில அபகரிப்புக்கு எதிராக மாநகரசபைக் கமிட்டி நடவடிக்கை எடுத்தபோது அவ்விடயத்தில் மேற்படி ஊடகவியலாளர் குறுக்கிட்டு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டுள்ளது. அஸ்கர் இதை முற்றாக மறுத்துள்ளார். அஸ்கர் மீதான இக்குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள ஊடகவியலாளர்கள், அவரது கையெழுத்தைப்பெற்று போலியான ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பொலிசாரின் முயற்சிக்கு அஸ்கர் உடன்படவில்லை என்று கூறியுள்ளனர்.

ஊடக சுதந்திரம் பாகிஸ்தானில் பிரச்சினைக்கு உரியதாக இருப்பினும் இம்ரான் கானின் ஆட்சியில் அது மோசமடைந்திருப்பதாக தெரிவிக்கும் ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாக். பிரதமர் அதை 'வேடிக்கையானது' என்று குறிப்பிட்டதை மேற்கோள் காட்டுகின்றனர்.

1990 - 2020 காலப் பகுதியில் 138 ஊடகவியலாளர்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஊடகவியலாளராகத் தொழில் புரிவதற்கு ஆபத்தான இடம் என்ற பட்டியலில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் இருப்பதாகவும் ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Mon, 07/12/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை