முன்னேஸ்வரம் தேவஸ்தான சோமாஸ்கந்த சர்மாவின் மறைவு பெரும் இழப்பாகும்

பாபு சர்மா, பத்மநாப சர்மா ஆகியோர் அனுதாபம்

முன்னேஸ்வர தேவஸ்தானத்து பாரம்பரிய குருவாகிய பிரம்மஸ்ரீ சோமாஸ்கந்த சர்மா அமரத்துவமடைந்தார். அவரது மறைவு செய்தி கேட்டு புத்தசாசன,மத, கலாசார விவகார அமைச்சரான பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

சிறந்த சோதிட அறிவும் முன்னேஸ்வர தேவஸ்தானத்தின் பூஜைகளை கைங்கரியமாக செய்துவந்தவருமான பிரம்மஸ்ரீ சோமாஸ்கந்த சர்மா, சாந்தி பரிகாரங்கள் செய்வதில் நிருணத்துவமுடையவர். வெளிநாடுகளிலும் தனது ஆன்மீக பணிகளை அவர் சிறப்புற செய்து வந்தார்.

சோமாஸ்கந்த சர்மாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.அன்னார் பௌத்த மக்கள் இடையேயும் நன்மதிப்பைப் பெற்றவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வடிவாம்பிகை சமேத முன்னைநாதப் பெருமானை நாம் அனைவரும் மனதார பிரார்த்திப்போம் என கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னேஸ்வரம் பிரதம குருக்கள் பிரம்மஸ்ரீ பத்மநாப சர்மா விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முன்னேஸ்வரம் தேவஸ்தானத்து பாரம்பரியத்துள் ஒருவராகிய ந. சோமாஸ்கந்த சர்மா நேற்று (20) ஆம் திகதி இரவு அமரத்துவமடைந்தார்.

நல்லூரைப் பூர்வீகமாக் கொண்ட பிரம்மஸ்ரீ நடராஜ ஐயர்,வாலாம்பிகை அம்மா தம்பதிகளின் புதல்வரான அவர்,தமது மரபு சார்ந்த கல்வியை முன்னேஸ்வரத்தில் பிரம்மஸ்ரீ இ.பாலசுப்பிரமணிய குருக்கள், பிரம்மஸ்ரீ சாம்பசிவ குருக்கள்,பிரம்மஸ்ரீ சி. பாலசுப்பிரமணிய குருக்கள், பிரம்மஸ்ரீ இரத்ன கைலாசநாத குருக்கள், ஆகியோரிடமும் கற்றுத் தேர்ந்தவர். சிறந்த சோதிட அறிவும் அனுபவமும் உடைய அவர், முன்னேஸ்வர தேவஸ்தானத்தில் நித்திய பூஜைகளை மேற் கொண்ட சிறப்புடையவர். சோதிட முறையின் படி சாந்தி பரிகாரங்களை ஆற்றுவதிலும் ஆற்றுப்படுத்துவதிலும் நிபுணத்துவமுடையவர். இந்தியாவிலும் மேலைத்தேய நாடுகளிலும் தனது புலமையை வெளிப்படுத்தியவர். கணீரென்ற குரல், அக்ஷரசுத்தி இவருக்கென்ற தனி அடையாளமாகும்.

இத்தகைய பெருமைகளைக் கொண்ட அமரர் ந.சோமாஸ்கந்த சர்மாவின் இழப்பானது ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய முன்னேஸ்வரம் அருள்மிகு வடிவாம்பிகாதேவி சமேத முன்னைநாதப் பெருமானை பிரார்த்திக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Wed, 07/21/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை