ஒன்லைனில் முன்பதிவு செய்வதால் இடையூறின்றி தடுப்பூசியை பெறலாம்

ஒன்லைனில் திகதியை முன்பதிவு செய்வதன் மூலம் மேல்மாகாணத்தில் தடுப்பூசியைப் பெறுவதில் மக்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாது என தெரிவித்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பிற மாகாணங்களில் உள்ளவர்கள் விரைவில் ஒன்லைன் பதிவு முறை மூலம் தடுப்பூசிக்கு பதிவுசெய்துக்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை மிகவும் வினைத்திறனான செயற்பாடாக மாற்றியமைக்கும் நோக்கில் ஒன்லைன் பதிவு முறையை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிமுகப்படுத்தி வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேல் மாகாணத்தில் வசிப்பவர்கள் தடுப்பூசி மையங்களில் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தால் தங்கள் தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் பதிவு செய்யலாம். தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி மேற்கு மாகாணத்தில் இல்லை என்றாலும் மேல் மாகாணத்தில் வசிப்பவர்கள் இந்த ஒன்லைன் திட்டத்தின் மூலம் பதிவு செய்து தற்போது அவர்கள் வசிக்கும் கிராம சேவகர் பகுதியை உறுதிப்படுத்தும் ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம்.

கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெறுவதிலும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் சுகாதார அமைச்சு மேல் மாகாண சுகாதார இயக்குநர் அலுவலகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ஐ.சி.டி.ஏ) இணைந்து இந்த புதிய ஒன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிற மாகாணங்களில் உள்ளவர்கள் விரைவில் ஒன்லைன் பதிவு முறை மூலம் தடுப்பூசிக்கு பதிவுசெய்துக்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேல் மாகாணத்தில் முதல் டோஸ் மட்டுமே பெற்றவர்களுக்கு இரண்டாவது முறையைப் பெறும்போது ஒன்லைனில் பதிவு செய்து தடுப்பூசியை பெறும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

நாம் உலகளவில் சவாலான காலகட்டத்தை கடந்து வருகிறோம். தொற்றுநோயை எதிர்கொள்வதில் நாம் சுகாதாரமான நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்தே அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 07/14/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை