பாகிஸ்தானில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை

ஊடகங்கள், மனித உரிமை ஆணைக்குழு கவலை

பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், சிறுமைப்படுத்தலும் பாகிஸ்தானில் அதிகரித்து வருவதாகவும் மகளிர் தொடர்பான மக்களின் சிந்தனையில் மாற்றம் வரவேண்டும் என்றும் ஊடகங்கள் ஊடாக கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

நியுஸ் இன்டர்நெஷனல் பத்திரிகை தனது ஆசிரிய தலையங்கத்தில் இது குறித்து எழுதும்போது,..

பெண்களின் பாதுகாப்பு சமீப காலமாக அதிகரித்து வரும் பிரச்சினையாகி வருவதாகவும் பெண் உரிமை, அவர்களது கௌரவம் என்பன கேள்விக்குறியாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு தினமும் 11 பெண்கள் வல்லுறவுக்குள்ளாவதாகவும் பாலகர்களும் இதில் இருந்து தப்புவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஒரு தம்பதியினர் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு பாலியல் பலாத்காரம் இணைய தளத்தில் பரபரப்பானதையடுத்து சம்பந்தப்பட்டவரை பொலிஸார் கைது செய்த சம்பவத்தை மேற்கோள்காட்டியுள்ள இந்த பத்திரிகை, இவ்வகையான வன்முறைகள் சாதாரணமாக நடைபெறுபவைதான் என்றும் இணைய தளங்களில் பிரசித்தப்படுத்தப்பட்டதால்தான் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது. பெண்கள் அணியும் ஆடைகள், அவர்களின் நடத்தைகள் குறித்து பேசும் ஆண்கள், பிரசவத்தில் மரணிக்கும் பெண்கள் தொகை, அவர்கள் மீதான வன்முறை, கல்வி மற்றும் சுகாதாரத்தில் போதிய இடமளிக்கப்படாமை பற்றி கவலைப்படுவதில்லை என்று இந்த ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கையில் பாலின சமத்துவமற்ற தன்மை நாடெங்கும் காணப்படுவதாகவும் பால்ய திருமணம், கௌரவக்கொலை என்பன நடைபெறுவதோடு பலவந்தமாக மதமாற்றம் செய்யப்படுவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் மருத்துவரான கசுர் ஹமாரா, பெண்களை சிறுபராயத்திலேயே திருமணம் செய்து கொடுப்பதற்கு பதிலாக பாடசாலைகளுக்கு அனுப்பினால் அடுத்த பரம்பரையின் நல்வாழ்வுக்கு அது வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.

Wed, 07/14/2021 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை