சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் கொடுக்க சவூதி அரேபியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை

இலங்கை மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையிலான சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவது தொடர்பில் கூட்டு திட்டமொன்றை ஆரம்பிப்பது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹமட் அல் காதிப்புடன்  விசேட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு அமைச்சர்களுக்கும் இடையிலான இப்பேச்சுவார்த்தை ஸூம் தொழில்நுட்பத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுற்றுலாத் துறையை கட்டியெழுப்ப ஒரு கூட்டுத் திட்டத்தைத் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கையில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சவுதி அரேபியாவின் சுற்றுலாத்துறை அமைச்சருக்கு விளக்கமளித்தார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீத மாணவர்களுக்கு கொவிட்19 தடுப்பூசியை செலுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும். நாட்டில் சுற்றுலாத் துறையில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் ஏற்கனவே தடுப்பூசி வழங்க தொடங்கியுள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்குள் அவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்க முடியும். இலங்கையை கொவிட் பாதுகாப்பான நாடாக ஏனைய நாட்டு அரசாங்கங்கள் நம்புகின்றன. ஆகவே, சுற்றுலாத்துறை வளர்ச்சியை உலக அளவில் மேம்படுத்துவதில் இலங்கைக்கு உதவுமாறு சவூதி அரேபிய சுற்றுலாத்துறை அமைச்சிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கேட்டுக்கொண்டார்.

சவுதி அரேபியா சுற்றுலாத்துறை அமைச்சர் அஹமட் அல்காதிப், சவுதி அரேபியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என  உறுதியளித்துள்ளார்.2022 க்குள் உலக சுற்றுலாத்துறை மீண்டும் வழமைக்கு திரும்பும்  என சவுதி அரேபியா சுற்றுலாத்துறை அமைச்சர் இதன்போது நம்பிக்கையும் வெளியிட்டார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்
 

Fri, 07/16/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை