தென்னாபிரிக்காவில் வன்முறை; உயிரிழந்தோர் 72 ஆக அதிகரிப்பு

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜகப் சூமா கைது செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

இதில் செவடோ நகரில் கடை ஒன்றில் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற கொள்ளையின்போது 10 பேர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லபட்டவர்களுள் அடங்குகின்றனர்.

டர்பன் நகரில் தரைத்தளத்தில் இருக்கும் கடைகள் சூறையாடப்பட்ட நிலையில் அந்தக் கட்டடம் தீப்பற்றியதால் அந்தக் கட்டடத்தின் மேல் மாடியில் இருந்து குழந்தை ஒன்று வீசி எறியப்படும் காட்சி ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் தொடக்கம் இந்த பதற்ற சூழல் நீடித்து வரும் நிலையில் பொலிஸாருக்கு உதவியாக தற்போது இராணுவமும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

கலகத்தை தூண்டிய 12 பேர் அடையாளர் காணப்பட்டிருப்பதாகவும் மொத்தம் 1,234 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தென்னாபிரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு முடிவுக்கு வருவதற்கு முந்திய 1990ளுக்கு பின்னர் நாட்டில் இடம்பெறும் மோசமான வன்முறைகளில் ஒன்று என்று இதனை அந்நாட்டு ஜனாதிபதி சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார். பிரதான நகரங்களில் தீவைப்புகள் இடம்பெற்றிருப்பதோடு நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டு வர்த்தகங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் சூறையாடப்பட்டுள்ளன.

சூறையாடல்கள் தொடர்ந்தால் ஆபத்தான பகுதிகளில் மிக விரைவில் அடிப்படை பொருட்கள் தீர்ந்துவிடும் என்று எச்சரித்திருக்கும் அமைச்சர்கள், அவசர நிலையை பிரகடனம் செய்வதற்கான வாய்ப்பை மறுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ஜகப் சூமா தமது பதவிக் காலத்தில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக தவறியதை அடுத்து நீதிமன்றத்தை அவமதித்ததாக கடந்த மாதம் குற்றங்காணப்பட்டார்.

தம் மீதான ஊழல் குற்றச்சாட்டை மறுக்கும் சூமாவுக்கு 15 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் பொலிஸாரிடம் கடந்த வாரம் சரணடைந்தார்.

நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் தம் மீதான தண்டனை திரும்பப் பெறப்படும் அல்லது குறைக்கப்படும் என்று அவர் நம்பியுள்ளார்.

இந்நிலையில் போலி செய்திகளை வெளியிடும் இணையப் பக்கம் ஒன்றே பதற்றத்தை தூண்டியதாக சந்தேகிக்கப்படுவதோடு சூமாவின் மகள் டுடுசில் சூமா வெளியிட்ட ட்விட் பதிவை ஆராய்ந்து வருவதாக ஆளும் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

நிறப்பாகுபாடு முடிவுக்கு வந்து 27 ஆண்டுகள் கடந்த நிலையில் நாட்டில் ஏற்றத்தாழ்வு அதிகரித்திருக்கும் சூழலிலேயே சூமா கைது செய்யப்பட்ட பின்னர் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

கொரோனா தொற்றுக்கு எதிரான முடக்கநிலையும் தென்னாபிரிக்காவில் வறுமையை மேலும் அதிகரித்துள்ளது. அங்கு வேலையில்லாதோர் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 32.6 வீதமாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பின்னேரம் வரையில் 200க்கும் அதிகமான பேரங்காடிகள் சூறையாடப்பட்டிருப்பதாக புளும்பேர்க் செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

Thu, 07/15/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை