நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை நோக்கி

சபையில் கபீர் ஹாசிம் கவலை

நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. சரியான முகாமைத்துவம் இல்லாமையே இதற்கு காரணமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிதி முகாமைத்துவப்(பொறுப்பு) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, 2020ஆம் ஆண்டின் 06ஆம் இலக்கஒதுக்கீட்டுச் சட்டத்தின் 08ஆம் பிரிவின் கீழான கட்டளை, ஏற்றுமதி இறக்குமதி (கட்டளை) சட்டத்தின்கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. சரியான முகாமைத்துவம் இல்லாமையே இதற்கு காரணமாகும். வெளிநாட்டு கடன் தொகையும் அதிகரித்திருக்கின்றது. நாட்டின் மொத்த உள்நாட்டு வருமானத்தில் நூற்றுக்கு 105 வீதம் வரை எமது கடன் அதிகரித்திருக்கின்றது. எமது ஆட்சி காலத்திலும் பொருளாதார பிரச்சினைகள் இருந்தன. அவ்வாறான நிலைமையிலும் நாங்கள் மக்கள் மீது பொருளாதார சுமையை சுமத்தவில்லை.

குறிப்பாக 2019ஆம் ஆண்டு காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை தற்போது அதன் விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும்போதும் சில பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்திருக்கின்றது. பொருளாதார பிரச்சினைக்கு மத்தியிலும் எமது ஆதார கணக்கை நாங்கள் மறை பெருமானத்தில் பாதுகாத்துவந்தோம். அவ்வாறான சந்தர்ப்பங்கள் சுதந்திரத்துக்கு பின்னர் கடந்த அரசாங்க காலத்திலேயே இடம்பெற்றிருக்கின்றன.

மேலும் உலகில் நடுத்தர வருமானம் பெறும், அதிக கடன் இருக்கும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இலங்கை இருக்கின்றது. அதன் முதலாம் இடத்தில் இருப்பது லெபனான். நாங்கள் எந்த இடத்துக்கு பொருளாதார ரீதியில் விழுந்திருக்கின்றோம் என்பதை விளங்கிக்கொள்ளலாம். 2020 நிறைவில் அரச நிறுவனங்களின் கடன் ஆயிரம் பில்லியன் ரூபாவை எட்டியிருக்கின்றது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் கடன் எல்லையை மேலும் அதிகரித்துக்கொள்ள தீர்மானித்திருக்கின்றது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவதற்கு பொருத்தமான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தவில்லை.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 06/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை