17% சமூக வலை தளங்களுக்கு உரிமையாளர்கள் எவருமில்லை

சட்ட நடவடிக்கையே தீர்வு தரும் -அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

இலங்கையில் நூற்றுக்கு 17 சத வீதமான சமூக வலை தள கணக்குகள் உரிமையாளர்கள் அற்றவைகளாகவே காணப்படுகின்றன. வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்தும் நோக்கில் வக்கிரமாக செயற்படும் இவ்வாறான சில சமூக ஊடகங்களால் பிரதான ஊடகங்களும் சவாலுக்கு முகம் கொடுக்கின்றன. எனவே தான் இவை தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக அமைச்சரவை பேச்சாளர் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் , புலானாய்வு பிரிவினரால் சமூக வலைத்தளங்கள் கண்காணிப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்த விடயம் தொடர்பில் வினவியபோதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சமூக வலை தளங்கள் தொடர்பான தீர்மானம் கடந்த 03 வாரங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக எடுக்கப்பட்டதாகும். அதில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கமைய இலங்கையில் நூற்றுக்கு 17 வீதமான சமூக வலை தள கணக்குகள் உரிமையாளர்கள் அற்றவையாகவே காணப்படுகின்றன.

இவை ஏதேனும் வகையில் நாட்டுக்கும் மக்களுக்கும் தேசிய ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் இயங்குவதால் அவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று உலக நாடுகள் பலவும் இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குறிப்பாக இந்தியா , அவுஸ்திரேலியா மற்றும் 05 நட்சத்திர ஜனநாயக நாடுகளில் இதுபோன்ற சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சமூக வலைதள கணக்குகள், உண்மையான செய்திகளை மக்களுக்கு வழங்கும் பொறுப்புள்ள ஊடகங்களுக்கும் பாரிய சவாலாகியுள்ளன.

வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்தும் நோக்கில் வக்கிரமாக செயற்படும் சில சமூக ஊடகங்களால் பிரதான ஊடகங்களின் சரியான வழிகாட்டல்கள் கூட கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

எனவே பிரதான ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இந்த தீர்மானம் குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும். இது தொடர்பில் சுமார் ஒரு மாததத்துக்கு முன்னர் நீதி அமைச்சு மற்றும் ஊடக அமைச்சு இணைந்து சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவை பத்திரத்துக்கு ஏற்ப தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

ஷம்ஸ் பாஹிம்,

Wed, 06/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை