வருடம் முழுக்க நாட்டை முடக்கி வைத்திருக்க முடியாது

நாளொன்றுக்கு PCR சோதனை நடத்த  800 இலட்சம் ரூபா செலவு

வைத்திய நிபுணர்கள் கூறுவதைப்போல் வருடம் பூராகவும் நாட்டை முடக்கி வைத்துக்கொண்டிருக்க முடியாது எனவும் நாளொன்றுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக மாத்திரம் 800 இலட்சம் ரூபா செலவாவதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவது அவசியமானதே, ஆனால் அதைவிடவும் நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டில் பரவிக்கொண்டுள்ள கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது நாடு முடக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்காலிக முடக்கத்தை சாதகமான பெறுபேறுகளாக வெளிப்படுத்தி எம்மால் தொடர்ந்தும் நாட்டினை முடக்கி மக்களை வீடுகளுக்குள் அடைத்து வைக்க முடியாது.

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் அதே வேளையில் மக்களின் நாளாந்த வாழ்க்கை முறைமைக்கும் இடமளிக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் மக்களின் செயற்பாடுகள் பிரதானமானது. மக்கள் தமது பாதுகாப்பை முதலில் உறுதிப்படுத்த வேண்டும்.

பொறுப்பான மக்களாக அவர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும். அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல்களை விடுக்க முடியும், கட்டுப்பாடுகளை பிறப்பிக்க முடியும். ஆனால் அவற்றை பின்பற்ற வேண்டியது பொதுமக்களின் கடமையாகும். மக்கள் சட்டத்தை, விதிமுறைகளை மீறுவதானால் அது மக்களையே இறுதியாக பாதிக்கின்றது.

கொவிட் என்பது உலகளாவிய ரீதியில் தாகத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு தொற்றாகும்.நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இவ்வாறு ஒரு அழிவு வந்தது. இப்போது மீண்டும் அவ்வாறான அழிவொன்று ஏற்பட்டுள்ளது. இதில் ஏனைய நாடுகளை போன்றே நாமும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகவே இந்த தாக்கங்களுக்கு யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது.

ஏனைய நாடுகளை விடவும் நாம் பாதுகாப்பான நிலையில் உள்ளோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல நாட்டின் சுகாதாரத்துறை வீழ்ச்சி காண்பதைப்போல் அல்ல, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டால் பாரிய நெருக்கடியை சகலரும் எதிர்கொள்ள நேரிடும்.

நாளொன்றுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக மாத்திரம் 800 இலட்சம் ரூபா செலவாகின்றது. ஏனைய சகல சுகாதார செயற்பாடுகளுக்கும் கோடிக்கணக்கான பணம் செலவாகின்றது. எனவே நாட்டை முடக்குவது என்பது முழுமையான முடக்கமாக இருக்கக்கூடாது. தொற்றாளர்களை மாத்திரம் வீடுகளில் முடக்கிவிட்டு சாதாராண நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும். ஜனாதிபதியும், இராணுவத் தளபதியும் அதிகளவில் பொறுப்பை சுமந்துகொண்டு தீர்மானங்களை எடுக்கின்றனர். நாம் அதற்கான முழுமையான ஒத்துழைப்புகளை கொடுக்கின்றோம் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Fri, 06/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை