மீட்புப் பணிகளில் கடற்படையினர்

படகுகளுடன் 13 நிவாரணக் குழுக்கள் தயார்

 

சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கித்  தவிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையின் படகுகளுடன் 13 நிவாரணக் குழுக்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் இந்திக சில்வா தெரிவித்தார்.

மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளிலேயே கடற்படையின் விஷேட குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தின் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள கம்பஹா, ராகம, மஹபாகே, களனி, புலத்சிங்ஹல மற்றும் பரகொட பகுதிகளிலும் தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள தமலம, ஹினிதும, நாகொட, எப்பால, மாபலகம மற்றும் அதுரெலிய ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் வீடுகளில் சிக்கித் தவித்தவர்களை தமது படகுகளின் மூலம் கடற்படையினர் மீட்டெடுத்தனர். இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேசமான காலநிலை தொடர் மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவென கடற்படையின் மேலதிக நிவாரணக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

 

ஸாதிக் ஷிஹான்

Sat, 06/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை