தண்டவாளத்தில் தலை வைப்போம் என்றவர்கள் துண்டு போடுகின்றனர்

கம்பெரலிய திட்டங்களால் மக்களுக்கு பிரயோசனம் எதுவுமில்லை

 

தண்டவாளத்தில் தலை வைப்போம் என்றவர்கள், துண்டு போட்டு இடம் பிடிக்கின்றனர், இதுவே போலித் தமிழ் தேசியமென்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போலித் தமிழ் தேசிய வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களும் போலியானவையாகவே இருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

கற்கோவளம் பகுதியில் இடிந்த நிலையில் காணப்பட்ட பாலத்தை நேற்று (04) பார்வையிட்ட போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கற்கோவளம் கடற்றொழிலாளர்களின் பயன்பாட்டுக்காக கடந்த அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட பாலம், சரியான முறையில் அமைக்கப்படாமையினால் ஒரு வருடத்திற்குள் இடிந்து விழுந்துள்ளது.

பிரதேச கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கமைய, இப்பகுதிக்குச் சென்று பார்வையிட்ட அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

"அன்று யாழ் பல்ககைக்கழக வளாகம் உருவான போது, வளாகம் வேண்டாமென எதிர்த்த அரசியல்வாதிகள், இப்போது அந்த பல்கலைக்கழகத்தை தமது சுயலாப போலி எதிர்ப்பு அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

அதுபோலவே,யாழ் நோக்கி புகையிரதம் வந்தால் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துத் தடுப்போமென சூளூரைத்தவர்கள் அதே புகையிரதத்தில் ஏறி பயணம் செய்வதற்கு முண்டியடிக்கின்றனர். இதுதான் எங்களுக்கும் அடுத்தவர்களுக்குமிடையிலான அரசியல் வேறுபாடு.

இவ்வேறுபாட்டை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்களாயின், பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது, அத்துடன், இவ்வாறான வேலைத்திட்டங்களையும் காத்திரமானதாக உருவாக்கி நீண்ட காலத்திற்கு பலன் அடைந்திருக்க முடியும்.

இதுபோன்றே கூட்டமைப்பினரின் கம்பெரலிய திட்டங்களும் மக்களுக்கு பயனற்று போயுள்ளமையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Sat, 06/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை