நாட்டில் இரசாயன உரப் பாவனை 04 வருடங்களில் 300% அதிகரிப்பு

-பாராளுமன்றில் அமைச்சர் மஹிந்தானந்த

மிகவும் ஆபத்தானது: தடுத்து நிறுத்த எதிரணி ஒத்துழைக்க வேண்டும்

இரசாயன உரப் பாவனை கடந்த நான்கு வருடத்தில் நூற்றுக்கு முன்னூறு சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இது மிகவும் ஆபத்தானதொரு நிலையாகும். இரசாயன உரப் பாவனையால் ஆரோக்கியமற்ற சமூகமொன்று உருவாகி வருகிறது. இதனை தடுத்து நிறுத்தி சேதனப் பசளை முறைக்கு விவசாயத்தை நகர்த்தும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விவசாய அமைச்சின் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி அமைச்சரவைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் காலநிலை மாற்றங்களுக்கு நிலைபேண்தகு தீர்வு எட்டப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தார். அமைச்சரவைப் பத்திரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த முடிவு வரலாற்று சிறப்புமிக்கதொரு தீர்மானமாகும்.

ஜனாதிபதியின் இந்த முடிவு உலகின் ஏனைய நாடுகளையும் கவனம் செலுத்த வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, உலக உணவுத் தாபனம் ஆகியன ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை வரவேற்றுள்ளன. உலக உணவுத் தாபனம் மற்றும் இலங்கையில் வெளிநாட்டு தூதரகங்கள் எமது அமைச்சின் வேலைத்திட்டத்தை வரவேற்றுள்ளன.

உலகில் இரசாயன உரத்தை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டுவந்த பல நாடுகள் தற்போது சேதன பசளையை பயன்படுத்தி விவசாயம் செய்யும் நிலையை நோக்கி நகர்ந்து வருகின்றன. இரசாயன உரப் பாவனையால் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரத்துக்கு ஏற்படும் ஆபாத்தமான நிலையை ஆய்வுகள் மூலம் உணர்ந்து அந்தச் செயற்பாடு கைவிடப்பட்டு வருகிறது. உலகில் 187 நாடுகள் சேதன பசளை முறையை நோக்கி நகர்ந்துள்ளன.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 06/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை