கொழும்பு துறைமுக நகரத்தில் ஐந்து ஆண்டுகளில் 15 பில். டொலர் முதலீடு

தேவையான வரைபு புதிய சட்டத்தின் மூலம் உருவாக்கம்

புதிய துறைமுக நகரை மையமாகக் கொண்டு அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை நாட்டுக்குள் ஈர்க்கவும், கடன் வாங்குவதற்குப் பதிலாக, கடன் அல்லாத அந்நிய செலாவணி வருவாயை இலக்காகக் கொண்டுமே இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டு மாநாடு - 2021 இரண்டாவது தின ஆரம்ப நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று முன்தினம் உரையாற்று கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்

2006 முதல் 2014 வரையான 09 ஆண்டு காலத்தில் நமது நாடு அபிவிருத்தியடைந்த வேகத்தை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அக்காலத்தில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 பில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 79 பில்லியன் வரை வேகமாக அதிகரிக்க எம்மால் முடிந்தது.

ஆனால் பின்னர் 2015 முதல் 2019 வரையிலான 05 ஆண்டுகளில், எங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி 82 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை மாத்திரமே அதிகரித்தது. எனவே, நம் நாட்டில் பொருளாதார நன்மைகளின் வளர்ச்சி தடைப்பட்டது. புதிய திட்டங்களை ஆரம்பிக்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டது.

2020ஆம் ஆண்டில், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், உலகம் முழுவதையும் சூழ்ந்த கொவிட் தொற்றை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கொவிட்19 அச்சுறுத்தலிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க நாங்கள் 66 நாட்களுக்கு முழு நாட்டையும் மூட வேண்டியிருந்தது. ஒட்டுமொத்த வணிகத் துறையும் கடுமையான சவால்களை எதிர்கொண்டது.

எனினும், எமது மக்களின் வாழ்க்கை நிலையை திருப்திகரமான மட்டத்தில் பேண எமது அரசாங்கத்திற்கு முடிந்தது. இந்தத் தீவிரமான சூழ்நிலையை நாம் தொடர்ந்து எதிர்கொண்டு, நம் நாட்டை மீண்டும் ஒரு துடிப்பான பணியிடமாக மாற்ற வேண்டும். நாம் இதுவரை ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி, 'அனைவருக்கும் நீர்' மற்றும் புதிய அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்தல் போன்ற நாடு தழுவிய திட்டங்கள் மூலம் பொருளாதார ரீதியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றோம்.

வணிக நடவடிக்கைகளை எளிதாக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த தொழில்துறை வலயம் ஊடாக புதிய தொழில்களைத் தொடங்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருவோம். மருந்து பொருட்கள் உள்ளிட்ட புதிய தொழில்துறை வலயங்கள் ஏற்கனவே நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுக நகர திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கு தேவையான சட்ட கட்டமைப்பை வகுத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார காரணிகளை சரியான திசையில் கொண்டு செல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதன்படி, இப்போது நம் நாடு மீண்டும் 06 சதவீத வளர்ச்சி விகிதத்தை தாண்டிய பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் வளர்ச்சி வேகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம். இதற்கு மூலதன முதலீட்டை குறிப்பிடத்தக்க அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் பொருளாதாரத்தின் உற்பத்தித்திறனை விரிவாக்குவதற்கும் அதிக முதலீடு தேவை என்பதையும் நாங்கள் அறிவோம். இதற்கான அரசாங்கத்தின் மூலதன செலவுத் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம். இதேவேளை, முதலீட்டை அதிகரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க எதிர்பார்க்கிறது என்று பிரதமர் தனதுரையில் குறிப்பிட்டார்.

Wed, 06/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை