கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் மலையக மக்களுக்கு முன்னுரிமை

- பிரஜா சக்தி பணிப்பாளர் பரத் அருள்சாமி

கண்டி மாவட்டத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இ.தொ.கா வின் செயலாளரும் ன சட்டத்தரணி பிரஜா சக்தி பணிப்பாளருமான பரத் அருள்சாமி தெரிவித்தார். 

அதே வேளையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது ெதாடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

கண்டி மாவட்டத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை கட்டம் கட்டமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் கண்டி மாவட்ட மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் கண்டி மாவட்டத்தில் காெவிட் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 8000ற்கும் மேலாக அதிகமாகி உள்ள நிலையில் அரசாங்கத்தின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. கண்டி மாவட்டத்தில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கும் இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்குமாறு ஆளுநர் உட்பட அனைத்து துறையினருக்கும் அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.  

இந்த கொரோனா காலப்பகுதியில் நாட்டின் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் தேயிலைத் துறை தொடர்ந்து செயற்பட்டு எமது நாட்டின் பொருளாதாரத்திற்கும் அந்நிய செலவாணிக்கும் வழிவகுக்கின்றது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். எமது பெருத்தோட்ட தொழிலார்களின் அயராத உழைப்பின் காரணமாகவே இது சாத்தியமாகி உள்ளது. எனவே தடுப்பூசி வழங்கும் போது அவர்களுக்கும் முன்னுரிமை கொடுப்பது நியாயமான கோரிக்கையாகும். அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவர்களது பொருளாதாரத்துடன் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் சந்தர்ப்பம் அதிகமாகவுள்ளது. 

கண்டி மாவட்டத்தில், பன்விலை ரங்கலை, தெல்தோட்டை, கலஹா, புஸ்ஸல்லாவ மற்றும் நாவலபிட்டிய போன்ற பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட பகுதிகளுக்கும் இந்த தொற்றின் பாதிப்பின் அடிப்படையில் வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக முன்னுரிமை வழங்குமாறும் மேலும் பல்லேகல கைத்தொழில் பேட்டை மற்றும் கைத்தொழில் வலையங்களுக்கும் முன்னுரிமை தருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

புசல்லாவை தினகரன் நிருபர்   

Mon, 05/24/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை