அல் அக்ஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்; பலஸ்தீனுக்கான இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு கண்டனம்

ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியப் படையினர் மற்றும் பொலிஸாரினால் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலுக்கு பலஸ்தீனுக்கான இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.  

பலஸ்தீனுக்கான இலங்கை ஒருமைப்பாட்டுக் குழுவின் இணைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, பொதுச் செயலாளர் பெளசர் பாரூக் ஆகியோர் இணைந்து  வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பட்டிருப்பதாவது,  

ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசலில் ரமழானை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படையினரால் கடந்த வாரம்  நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அது மாத்திரமன்றி கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷெய்க் ஜர்ராவிற்கு அருகில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்களை சட்டத்திற்கு முரணாக வெளியேற்றுவதற்கும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களை நிறுவுவதற்குமான முயற்சிகளையும் கண்டிக்கின்றோம்.

சர்வதேச ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் பலஸ்தீனத்திலிருந்து வெளிவரும் செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் நோக்குகையில், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரால் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் பள்ளிவாசலுக்குள் இறப்பர் குண்டுகளும் கைக்குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலின் காரணமாக நோன்பு மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையன்று தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்களில் சுமார் 200 பேர்வரையில் காயமடைந்துள்ளனர்.

இந்த மிகமோசமான மனிதத்தன்மையற்ற அத்துமீறிய தாக்குதலைக் கடுமையாகக்
கண்டிக்கிறோம்.

இஸ்ரேலியப் படைகளின் இந்த மனிதத்தன்மையற்ற செயற்பாட்டைக் கண்டித்துவரும் உலக நாடுகளுடன் இலங்கை அரசாங்கமும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அத்தோடு ஜெருசலேமிலுள்ள அல் அக்ஸா உள்ளிட்ட புனித தலங்களின் காவலர்கள் என்ற அடிப்படையில் இது விடயத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று ஜோர்தானைக் கோருகின்றோம். மேலும் இஸ்­ரே­லிய ஆக்கிரமிப்பாளர்கள் சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை பலஸ்தீன மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தனது பொறுப்புக்களை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

Thu, 05/13/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை