இலங்கை முழுவதும் இன்றிரவு முதல் 4 நாட்களுக்கு பயணத்தடை

இலங்கை முழுவதும் இன்றிரவு முதல் 4 நாட்களுக்கு பயணத்தடை-4 Day Travel Restrictions Enforced from Today 11pm

- வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு
- தேசிய அடையாள அட்டை இலக்க முறைமையும் கிடையாது

இன்றிரவு (13) 11.00 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) அதிகாலை 4.00 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலுக்கு வருகின்றது.

ஆயினும் குறித்த காலப் பகுதியில், மேல் மாகாணத்தில் தற்போது இடம்பெற்று வரும் தடுப்பூசி வழங்கல் திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதோடு, அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி இடம்பெறும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

இதேவேளை இன்றிரவு முதல் 4 நாட்களுக்கும் நாடு முழுவதும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை முறை
இதேவேளை, தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய தமது தேவைகளை மேற்கொள்வதற்காக வீடுகளிலிருந்து வெளியில் செல்வது குறிப்பிட்ட 4 நாட்களும் அனுமதிக்கப்படாது எனவும், மே 17 அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை அந்நடைமுறை அமுலுக்கு வருவதாக, அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மே 31ஆம் திகதி வரை தினமும் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும்.

இக்காலப் பகுதியில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில், நேற்றையதினம் (12) பொலிஸ் தலைமையகத்தில் அஜித் ரோஹண விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 05/13/2021 - 13:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை