பிரதேச செயலாளர்கள் உட்பட அனைத்து அரச ஊழியர்களுக்கும் அடுத்த தடுப்பூசி வழங்கலில் முன்னுரிமை

- எவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்க வேண்டாம்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் முழுமையான கவனம் செலுத்தப்பட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில் அரசாங்க அதிகாரிகள் எவரும் தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடாமல் மக்களுக்கு அவசியமான சேவையை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. 

சில காரணங்களை முன்வைத்து நேற்றையதினம் நாடு முழவதும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்திருந்த நிலையிலேயே உள்நாட்டலுவல்கள் அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது. 

அது தொடர்பில் நேற்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என். எச். எம். சித்திரானந்த தெரிவித்துள்ளதாவது; 

நாட்டின் அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அடுத்த சுற்றில் தடுப்பூசிகள் வழங்குவதில்  முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளன. 

அது தொடர்பில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு பணிப்புரைகளை வழங்கியுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆகியோரின் கவனத்திற்கும்  அது எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கிணங்க நேற்றைய தினம் நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசிகளில் அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது. 

அதனை கருத்திற் கொண்டு நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எந்த அரசாங்க அதிகாரிகளும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டமென்றும் மக்களுக்கான சேவைகளை முறையாகப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் தயவாக கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம் 

Thu, 05/27/2021 - 11:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை