கல்முனை சுகாதார பிரிவில் சில பகுதிகள் அவதானத்துக்குரிய பகுதிகளாக அடையாளம்

- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கல்முனை வடக்கு, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் இவ்வாரம் அவதானத்திற்குரிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

கொரோனாத் தாக்கத்தின் மூன்றாம் அலையின் தாக்கம் கல்முனைப் பிராந்தியத்தில் வேகமாக பரவி வரக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதால் பொது மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு கேட்டுள்ளார்.

கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலையில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள கல்முனை வடக்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 18 பேரும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 13 பேரும், நிந்தவூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 08 பேரும், சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை தெற்கு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் தலா 07 பேரும், காரைதீவு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 05 பேரும், அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 04 பேரும், திருக்கோவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 03 பேரும், சாய்ந்தமருது சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் ஒருவருமாக மொத்தம் 73 பேர் அடயாளம் காணப்பட்டுள்ளதோடு இது வரை மொத்தம் 1557 பேர் கொரோனத் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாமலும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும் வீதியில் நடமாடுபவர்களை கைது செய்வதற்கு விசேட சுகாதார குழுவினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், முகக்கவசம் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பாற்றாதவர்களுக்கு பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பயணத் தடையை மீறி ஒன்று கூடியவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் சமூக மட்டத்தில் பரவுவதை தடுப்பதற்காக நாடளாவியரீதியில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட 13 சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொடர்பில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஒலுவில் விசேட நிருபர்

Mon, 05/17/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை