மன்னார் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவிப்பு

மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடும் காற்றும் கடல் கொந்தளிப்பும் காணப்படுவதால் இப் பகுதி மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இதனால் மன்னார் மாவட்ட மீனவர்கள் தென் கடல் பிராந்தியத்தில் தொழிலுக்கு செல்லாத நிலை காணப்படுகின்றது. அதேவேளையில் மன்னார் வட கடல் பிராந்தியத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்லாது கடந்த இரு தினங்களாக கரையோரத் தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (22) பேசாலை காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்களான எல்.றஸ்ஹான், என்.நிலாம் ஆகிய இரு மீனவர்கள் வழமைபோன்று அதிகாலை காட்டாஸ்பத்திரி துறையிலிருந்து நண்டு மீன்பிடிக்காக ஒரு படகில் வடகடல் கரையோரத் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.

இவர்கள் வழமைபோன்று அன்று பிற்பகல் வரை கரை திரும்பாததால் இப்பகுதியில் அன்று சற்று பதட்டநிலை காணப்பட்டது. அன்று காற்றும் கடல் கொந்தளிப்பும் சற்று பலமாக இருந்தபடியாலும் ஆழ்கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தமையாலும் உடனடியாக இவர்களை தேடி செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது. இருந்தபோதும் நேற்று ஞாயிற்றுக் கிழமை (23) காலை பேசாலை காட்டாஸ்பத்திரியிலிருந்து ஆறு படகுகள் இவர்களை தேடிச்சென்றபோது இவர்கள் யாழ் பகுதிலுள்ள கற்கடவைதீவுக்கு அருகாமையில் இருந்துள்ளனர். இவர்கள் படகுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கரையோரத் தொழிலான நண்டுபிடிக்க இவர்கள் சென்றிருந்தபொழுது இவர்களின் படகின் வெளிக்கள இயந்திரம் பழுதடைந்தமையாலேயே இவர்கள் படகை காற்றுக்கு வலியவிட்டு ஒரு கரையை அண்டிய நிலையில் கடலில் நங்கூரமிட்ட நிலையில் பாதுகாப்பாக இருந்துள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக் கிழமை (23) காலை 8.15 மணியளவில் தங்கள் துறை கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் விஷேட நிருபர் 

Mon, 05/24/2021 - 12:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை