சீரற்ற காலநிலையால் 46 ஆயிரம் பேர் பாதிப்பு

நான்கு பேர் இதுவரை உயிரிழப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 07 மாவட்டங்களிலுள்ள 11 ஆயிரத்து 796 குடும்பங்களைச் சேர்ந்த 46 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 636 வீடுகள் ஓரளவுக்கு சேதமடைந்திருப்பதாகவும் மத்திய நிலையம்  குறிப்பிட்டுள்ளது, 304 பாதுகாப்பு இடங்களில் 1,247 பேர் தங்கியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டின் பல பிரதேசங்களில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்கள் பல நிரம்பியுள்ளன.

மேல் மாகாணத்திலும் தெற்கிலும் அதிக மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றன. மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பதுரெலிய, நேபொட, அகலவத்தை உட்பட நில்வளா கங்கையை அண்டிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக காசல்ரீ, மௌசாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. களுத்துறை, நாகொட பிரதேசத்தின் பல இடங்கள் மண்சரிவுக்குள்ளாகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் நிலவும் அதிக மழை காரணமாக களுகங்கை நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. களனிகங்கையும் பெருக்கெடுத்ததனால் சீதாவக்க பிரதேசத்தில் 100 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கலாஓயாவின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணமும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நட்டஈடும் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Mon, 05/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை