காசா மீது இஸ்ரேல் ஏழாவது நாளாக குண்டு மழை; பலி 192 ஆக அதிகரிப்பு

போர் நிறுத்த முயற்சிகளும் ஸ்தம்பிதம்

தொடர்ச்சியாக ஏழாவது நாளாக காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் மேலும் 45 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு, பலரும் காயமடைந்திருப்பதோடு குறைந்தது இரண்டு குடியிருப்புக் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

இதில் காசாவின் ஹமாஸ் தலைவர் யெஹ்யா அல் சின்வாரின் வீடும் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மறுபுறம் இஸ்ரேலிய நகரங்களை நோக்கி நேற்றும் ரொக்கெட் குண்டுகள் பாய்ந்தன. டெல் அவிவில் சைரன் ஒலி எழுப்பப்பட்டதை அடுத்து மக்கள் பாதுகாப்பு இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

கடந்த ஒரு வாரத்தில் முற்றுகையில் உள்ள காசா பகுதியில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 192 ஆக அதிகரித்துள்ளது. இதில் குறைந்தது 58 சிறுவர்களும் அடங்குகின்றனர். 1000 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

அதேபோன்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கையும் 13 ஆக அதிகரித்துள்ளது.

இந்த மோதல்களில் இஸ்ரேல் தரப்பில் இரு சிறுவர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மோதல் உக்கிரம் அடைந்திருக்கும் சூழலில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் எகிப்து முயன்று வருகின்றபோதும் அதில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கான எந்த சமிக்ஞையும் தெரியவில்லை. இந்த நிலைமை குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபை நேற்று மீண்டும் ஒருமுறை அவசரக் கூட்டத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

எல்லை தாண்டிய தாக்குதல்களை தொடர்ந்து நடத்தப்போவதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் உறுதிகாகக் கூறியுள்ளன.

எவ்வளவு தேவைப்படுமோ அவ்வளவு காலம் காசா மீதான தாக்குதல்கள் தொடரும் என்று சனிக்கிழமையன்று தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில் இருந்து பலஸ்தீன தீவிரவாதிகள் 278 ரொக்கெட்டுகளை தமது பகுதியை நோக்கி ஏவியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் கூறுகின்றன.

இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள ஆஷ்தோத், பீர்ஷாபா, மற்றும் ஸ்தெராட் ஆகி நகரங்களில் உள்ள வீடுகள் இந்தத் தாக்குதலில் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல் அவிவ் நகரின் புறநகர் பகுதியான ரமாத் கன் எனும் பகுதியில் தெருவில் வந்து விழுந்த ரொக்கெட்டால் ஒருவர் கொல்லப்பட்டார்.

தமது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் இருந்த அந்த நபர் ரொக்கெட்டின் சிதறிய பாகங்கள் தாக்கியதில் காயமடைந்து இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா நகரில் ஊடக நிறுவனங்கள் செயல்பட்டு வந்த 12 மாடி கட்டடத்தை இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை தரைமட்டமாக்கியது.

முன்னதாக ஜலா டவர் என்ற அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் ஜாவத் மெஹ்தியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரி அந்தக் கட்டடத்தை தாக்கவிருப்பதாகவும், ஒரு மணி நேரத்தில் அதை காலி செய்துகொள்ளும்படியும் கூறியுள்ளார். இத்தகவலை ஜாவத் மெஹ்தி கூறியதாக ஏ.எப்.பி செய்தி முகமை கூறியுள்ளது.

பத்திரிகையாளர்கள் தங்கள் கருவிகளை எடுத்துக்கொள்ள கூடுதலாக ஒரு பத்து நிமிடம் அவகாசம் தரும்படி ஜாவத் அந்த அதிகாரியிடம் கெஞ்சுவதை ஏ.எப்.பி. செய்தி முகமை பார்த்துள்ளது. ஆனால், மறுமுனையில் பேசிய அந்த அதிகாரி அதற்கு மறுத்துவிட்டார்.

கட்டார் அரசு நிதியுதவியோடு நடக்கும் அல் ஜசீரா தொலைக்காட்சி, அந்த கட்டடம் வான் தாக்குதல் மூலம் தகர்க்கப்படுவதை நேரலையாக ஒளிபரப்பியது.

இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெரூசலம் பகுதியில் நடந்த மோதல்கள் கடந்த ஆறு நாட்களாக நடந்த வன்முறைச் சம்பவங்களின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

ஜெரூசலமில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசலில் இருந்து இஸ்ரேல் படைகள் விலக வேண்டும் என்று எச்சரித்து இஸ்ரேல் பகுதியின் மீது காசாவில் இருந்து ரொக்கெட் தாக்குதலை ஹமாஸ் அமைப்பு ஆரம்பித்தது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வான் தாக்குதல்கள் நடத்த ஆரம்பித்தது.

அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகம் யூதர்களின் புனித தலமாகவும் விளங்குகிறது. இதை அவர்கள் 'டெம்பிள் மவுண்ட்' என்று அழைக்கின்றனர்.

கட்டார் தலைநகர் டோஹாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது உரையாற்றிய ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியேஹ் தற்போதைய மோதலுக்கு ஜெரூசலம் விவகாரமே காரணம் என்று சுட்டிக்காட்டினார்.

'அல் அக்ஸா பள்ளிவாசலை தம்மால் தகர்க்க முடியும் என்று சியோனிசவாதிகள் நம்புகிறார்கள். செய்க் ஜர்ராவில் இருக்கும் எமது மக்களை இடம்பெயரச் செய்ய முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்' என்று அவர் குறிப்பிட்டார்.

'நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று நான் நெதன்யாகுவிடம் கூறிக்கொள்கிறேன். இந்த மோதல், இந்தப் போர், இந்த இன்திபாதாவின் தலைப்பு ஜெரூசலம், ஜெரூசலம், ஜெரூசலம்' என்று ஹனியேஹ் கூறினார்.

Mon, 05/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை