42 தொழிலாளர்களுடன் பயணித்த ட்ராக்டர் வண்டி விபத்து

 21 பேர் படுகாயம்

தோட்டத் தொழிலாளர்கள் 42 பேரை ஏற்றிச்சென்ற ட்ராக்டர் வண்டி விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர். இவர்களில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட இராகலை, நடுக்கணக்கு பகுதியிலேயே நேற்று (21) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இராகலை, ஸ்டாபோட் பிரிவிலுள்ள 42 தொழிலாளர்களை சுமார் 07 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள டிக்சன் கோனார் பகுதிக்கு வேலைக்கு ஏற்றிச்சென்ற ட்ராக்டர் வண்டியின் இயந்திரத்துடனான கொக்கி உடைந்ததால் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ட்ராக்டர் வண்டியில் முன்பகுதியில் சாரதி அமர்வதற்கான பகுதிக்கும் பின்புறமுள்ள பெட்டி பகுதியையும் இணைக்கும் கொக்கி உடைந்ததாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பெட்டியில் பயணித்தவர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அரசு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில் சிறியதொரு பெட்டியில் பொறுப்பற்ற விதத்தில் 42 தொழிலாளர்கள் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளனர் என பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். தொழில் பாதுகாப்பற்ற வகையிலேயே அவர்களை நிர்வாகம் அழைத்து வந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

நுவரெலியா தினகரன், தலவாக்கலை குறூப், ஹற்றன் சுழற்சி நிருபர்கள்

Sat, 05/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை