கொவிட்-19 பரவுவதை கட்டுப்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகள்

சுகாதார அமைச்சர் தலைமையில் ஏழு விசேட தீர்மானங்கள்

கொவிட்-19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுப்பதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையிலான கொவிட் ஒழிப்பு செயல்பாட்டு செயலணி முடிவெடுத்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கொவிட்19 ஒழிப்பு செயற்பாட்டு செயலணியின் மதிப்பீட்டு ஆய்வுக் கூட்டத்திலேயே இவ்வாறு கடுமையான முடிவுகளை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு,

1.கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளை பிற மாவட்டங்களிலும் கொவிட்19 தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்துதல்.

2.அனைத்து சுகாதார பிரிவுகளிலும் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குதல்.

3.பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும், மாவட்ட அளவில் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் விரைவான சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்.

4.தற்போது சோதனைக்காக சேகரிக்கப்பட்டு வரும் மாதிரிகளின் சோதனை அறிக்கைகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்தல்.

5.பி.சி.ஆர் சோதனைக்கு உட்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்கான திட்டத்தை உருவாக்குதல்.

6. தற்போது அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களுக்குத் தேவையான ஒக்ஸிஜன் மற்றும் பிற வசதிகளை விரைவுபடுத்துவதற்கும், பிற மருத்துவ உபகரணங்களை விரைவில் மையங்களுக்கு வாங்குவதற்கும் நடவடிக்கையெடுத்தல்.

7.மாவட்ட அளவில் பி.சி.ஆர் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக ஒரு அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, மேலதிக செயலாளர்கள் மற்றும் பிரதி பணிப்பாளர்கள், நிபுணர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளும் இந்த மதிப்பாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 05/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை