மத்திய வங்கியின் நிச்சயமற்ற கணக்கில் தோட்டத் தொழிலாளர்களின் ETF, EPF

- தனியான கணக்கில் வைப்பிலிட CWC நடவடிக்கை
- சட்டத்தரணி கா. மாரிமுத்து

ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபை, ஸ்ரீலங்கா அரச பெருந்தோட்ட யாக்கம் மற்றும் எல்கடுவ பிளாண்டேசன் ஆகியவற்றின் கீழ் இயங்கும் தோட்டங்களிலுள்ள தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன அறவிடப்பட்டு சரியான விபரம் இல்லாத காரணத்தினால் மத்திய வங்கியில் நிச்சயமற்ற வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் தனியான வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்ய துரித நடவடிக்கை எடுக்குமாறு இ.தொ.கா உபதலைவரும், சட்டத்தரணியுமான கா. மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் இ.தொ.காவின் பிராந்திய இயக்குனர்களுக்கு அனுப்பிவைத்துள்ள சுற்றறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இது பற்றி கடந்த 08ஆம் திகதி தொழில் திணைக்களத்தில் தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொழிற்சங்கங்களுக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. இதனோடு 09ஆம் திகதி மத்திய வங்கியிலும் இது தொடர்பாக விசேட கூட்டமும் நடைபெற்றது. இதன் அடிப்படையில் தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களின் “டீ” கார்ட், தேசிய அடையாள அட்டை போன்றன இல்லாத காரணத்தினால் நிரந்தர வைப்பீட்டில் வைப்பீடு செய்ய முடியவில்லை.

எவ்வாறாயினும் பிரதேச மட்டத்தில் பகுதிவாரியான தோட்ட நிர்வாகங்களோடு தொடர்பு கொண்டு இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்வதோடு சம்பந்தப்பட்டவர்களின் கணக்கில் மத்திய வங்கியில் வைப்பீடு செய்வதற்கு உடன் ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிராந்திய இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்ட தனது சுற்றறிக்கையில் சட்டத்தரணி கா. மாரிமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.

Sat, 04/17/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை