நீதியான விசாரணைக்கு பேராயர் குரல் கொடுக்கவில்லை

பாராளுமன்றத்தில் ஸ்ரீதரன் MP கடுமையாக சாடல்

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்காக இதுவரை நீதியான விசாரணை ஒன்றைக் கோராத பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித், ஒரு இனத்திற்காக மாத்திரம் ஆண்டகையாக செயற்படுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி,இறக்குமதி தொடர்பான சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கீழ்த்தரமாக விமர்சித்திருந்தார் , மதமொன்றின் தலைவராக இருந்துகொண்டு கர்தினால் கூறும் வார்த்தைகள் பலர் புருவங்களை உயர்த்திப் பார்க்குமளவுக்கு உள்ளது.

வடக்கு, கிழக்கு தமிழர்கள் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்திருந்த அண்மையில் காலமான மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ,வன்னி இறுதி யுத்தத்தில் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டோ காணாமல் ஆக்கப்பட்டோ உள்ளதாக புள்ளிவிபரங்களுடன் கூறியிருந்தார். ஆனால் பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பான நீதி விசாரணை வேண்டுமென ஏன் இதுவரையில் கோரவில்லை ?

எனவே கர்தினல் சிங்கள கிறிஸ்தவர்களுக்காக மட்டுமே பேசுகின்றார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களில் தமிழ் கிறிஸ்தவர்களே அதிகளவில் உள்ளனர். அதேபோன்று இறுதி யுத்தத்திலும் பல கிறிஸ்தவமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். , எனவே அனைவருக்காகவும் அவர் குரல் கொடுக்க வேண்டும். ஒரு மதத்தின் ஆண்டகையாக இருந்து கொண்டு ம் ஒரு இனத்துக்கு மட்டும் குரல் கொடுக்கக்கூடாது. இறுதி யுத்தத்தால் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் கர்தினல் இதுவரையில் குரல் கொடுக்காமல் இருப்பது தமிழர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நான் பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு எதிரானவன் அல்ல. ஆனால் அவர் ஒரு மதத்தின் தலைவராக இருந்துகொண்டு ஒரு இனத்துக்கு மட்டும் குரல் கொடுப்பது நியாயமல்ல என்றே கூறுகின்றேன் என்றார்.

(ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்)

Wed, 04/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை