தாக்கப்பட்ட மீனவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றனர்

கடற்படையினரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு அச்சப்படுகின்றனர்.தாக்குதலை மேற்கொண்ட கடற்படையினர் முறைப்பாடு செய்ய வேண்டாம் என குறித்த மீனவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 13ஆம் திகதி இரவு நேரத்தில் நாச்சிகுடா வளைப்பாடு எல்லை பகுதியில் இரண்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களுடைய மீன்பிடி உபகரணம் மற்றும் ஒரு தொலை பேசியையும் கடற்படையினர் எடுத்து சென்றுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பாதிக்கப்பட்ட மீனவர்களை வியாழக்கிழமை(15) நேரில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போதே பாதிக்கப்பட்ட மீனவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

கடற்படையினரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு அச்சப்படுகின்றனர்.

தாக்குதல் மேற்கொண்டதற்கான எந்த ஒரு காரணமும் கடற்படையால் மீனவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம் அவர்களிடம் இருந்த தொலைபேசியையும் பறித்து சென்றுள்ளனர்.

அதே நேரம் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்ட சமயத்தில் அங்கிருந்த மீனவர்கள் தாக்குதலை வீடியோ பதிவு செய்து விடக்கூடது என்பதற்காக அனைத்து தொலைபேசிகளையும் பறித்ததாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

இவ் விடயம் தொடர்பாக மன்னார் கடற்தொழில் திணைக்களத்திடம் வினவியதாகவும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தற்பொது விடுமுறையில் இருப்பதாகவும் இது தொடர்பாக தான் ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதே நேரம் கடற்றொழில் அமைச்சரிடமும் குறித்த விடயம் தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் குறித்த மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு நீதி வேண்டும் என கோரியதாகவும், தான் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மன்னார் குறூப் நிருபர்

Sat, 04/17/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை