ஐ.எஸ் தகர்த்த மொசூல் பள்ளிவாசல் புனரமைப்பு

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவால் தகர்க்கப்பட்ட மொசூலின் பெரிய பள்ளிவாசலான அல் நூர் பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்யும் போட்டியில் எகிப்து கட்டடக்கலைஞர்கள் குழு ஒன்று வெற்றி பெற்றுள்ளது.

மொசூல் நகரை கைப்பற்ற அரச படை முன்னேறியபோது 2017 ஜூன் மாதத்தில் இந்தப் பள்ளிவாசலை ஐ.எஸ் வெடி வைத்து தகர்த்தது.

இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐ.எஸ் குழு தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி இந்த பள்ளிவாசலில் இருந்தே, தன்னிச்சையாக கலீபத் ஒன்றை அறிவித்திருந்தார்.

மொசூல் நகரை புத்துயிர்பெறச் செய்யும் ஐ.நா திட்டதின் கீழே இந்தப் பள்ளிவாசல் புனரமைக்கப்படவுள்ளது.

பள்ளிவாசலை வடிவமைப்பது தொடர்பில் 123 நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில் எகிப்தின் எட்டு கட்டடக்கலைஞர்களின் வடிவமைப்பு வெற்றிபெற்றுள்ளது.

ஒன்பது மாதங்கள் வரை நீடித்த மொசூல் நகர மோதலால் அந்த நகர் முற்றாக அழிந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 90,000 க்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்தனர்.

இந்நிலையில் மொசூல் பள்ளிவாசலை புனரைப்பது அந்த நகரின் மீள் கட்டுமானத்தின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுவதாக ஐ.நா கலாசார நிறுவனமான யுனெஸ்கோவின் தலைவர் அவுட்ரே அசூலாய் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதியில் பள்ளிவாசல் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Sat, 04/17/2021 - 16:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை