உலக கொரோனா உயிரிழப்பு மூன்று மில்லியனை தொட்டது

உலகெங்கும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்று மில்லியனைக் கடந்துள்ளதாக ஜோன் ஹொப்கின்சன் பல்கலைக்கழக தரவுகள் குறிப்பிட்டுள்ளன.

உலகம் இதுவரை சந்தித்த அதிக எண்ணிக்கையான நோய்த் தொற்றை தற்போது எதிர்கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே உயிரிழப்பு புதிய உச்சத்தை பெற்றுள்ளது.

இந்தியா இரண்டாம் அலை தாக்கத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில் கடந்த சனிக்கிழமை மாத்திரம் 230,000க்கும் அதிகமான புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த பெருந்தொற்று ஆரம்பித்தது தொடக்கம் பதிவான தொற்றாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 140 மில்லியனை நெருங்கியுள்ளது.

கவலை தரும் வேகத்தில் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் கெப்ரியேசுஸ் கடந்த வெள்ளிக்கிழமை எச்சரித்திருந்தார்.

“கடந்த இரண்டு மாதங்களில் வாரத்திற்கு உலகெங்கும் பதிவாகும் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் கிட்டத்தட்டை இரட்டிப்பாகி உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உலகில் அதிக நோய்த் தொற்று பதிவாகும் நாடுகளாக இருக்கும் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசிலில் மாத்திரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று ஜோன் ஹொப்கின்சன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் உலகெங்கும் நாளொன்றுக்கு சராசரியாக 12,000 பேர் உயிரிழந்திருப்பதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் தரவுகள் காட்டுகின்றன.

எவ்வாறாயினும், உலகளாவிய உத்தியோகபூர்வ எண்ணிக்கைகள் பல நாடுகளின் உண்மையான எண்ணிக்கையை பிரதிபலிக்கவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Mon, 04/19/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை