திருமணமான பெண்களில் 22 வீதமானோருக்கு மந்த போசணை

- கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறிபிரதீப்

இலங்கையில் திருமணமான பெண்களில் 22வீதமானவர்கள் மந்த போசனைக்குள்ளாகியுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகள் காட்டி நிற்பதாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சிறிபிரதீப் தெரிவித்தார்.

விகாரைகள் மற்றும் மதஸ்தலங்களுக்கு முருங்கை மரக்கன்றுகளை விநியோகிக்கும் பணிகள் சனிக்கிழமை (17) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.

முருங்கை மரத்தின் மருத்துவ மதிப்பு மற்றும் பொருளாதார பெறுமதியை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் ‘வாழ்க்கைக்கான தோட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக புதுவருடத்தில் தலையில் எண்ணை பூசும் சுபநேரத்திற்கு இணைவாக இந்த முருங்கை மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த திட்டத்தின் கீழ் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஊடாக முருங்கை மரக்கன்றுகள் வழங்கும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது.

"ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக முருங்கை மரத்தினை நடல்" என்னும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

விவசாய இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்‌ஷவின் வழிகாட்டலில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கல்லடி கமநல சேவைகள் நிலையத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறிபிரதீப் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், 1000மரக்கன்றுகளை பகிர்ந்தளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பெருமளவான மதஸ்தலங்களை சேர்ந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் முருங்கை மரங்கள் நாடு முழுவதும் விவசாய அமைச்சினால் வழங்கப்படுகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பிலும் முருங்கை மரங்கள் கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று முருங்கை மரங்கள் வீட்டிலே அழிக்கப்பட்டுள்ளது.முருங்கை மரங்களை பாதுகாப்பது தொடர்பாக இன்றைய சமூகத்தில் கவனக்குறைவு இல்லாமல் இருக்கின்றது. 900நோய்களை குணப்படுத்தும் மகத்துவத்தினைக் கொண்டதாக முருங்கையிலை காணப்படுகின்றது. வெளிநாடுகளில் முருங்கையிலை அதிக பணம் கொடுத்து கொள்வனவு செய்து சாப்பிடுகின்றார்கள். அதன் காரணமாகவே முருங்கை மரக்கன்றுகள் இன்று பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றது.

மருத்துவ குணமுள்ள முருங்கையிலை சாப்பிடுவது இன்றைய எம்சமூகத்தில் குறைவடைந்து செல்கின்றது. இதனால் இலங்கையில் தற்போது திருமணமான பெண்களில் 22வீதமானவர்கள் மந்த போசனைக்குள்ளாகியுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகள் காட்டி நிற்கின்றது. இதன் காரணமாக பிள்ளைகளும் மந்தபோசனைக்குள்ளாகியுள்ளதாகவும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்

Mon, 04/19/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை