இந்தோனேசியா, கிழக்கு திமோரில் திடீர் வெள்ளம்: 101 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியா மற்றும் கிழக்கு திமோரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண் சரிவில் குறைந்தது 101 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் கிழக்கு ஆசிய அண்டை நாடுகளான இந்த இரு நாடுகளிலும் கடும் மழையால் அணைகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்ததால் வீடுகள் மூழ்கி பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் கிழக்கு திமோரில் இருந்து கிழக்கு இந்தோனேசியாவின் புளோரஸ் தீவு வரை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து லாமெனெலே என்ற மலை கிராமத்தில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 50 வீடுகள் மீது மண் சரிந்து விழுந்தது‌. இதில் அந்த வீடுகளில் இருந்த அதிகமானோர் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.

உடனடியாக அங்கு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்களுடன் உள்ளூரை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்களும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் 38 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. பலத்த காயங்களுடன் 9 பேர் மீட்கப்பட்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதனிடையே அருகிலுள்ள ஓயாங் பாயாங் மற்றும் வாய்புராக் ஆகிய கிராமங்களில் 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.‌ அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.

இந்தோனேசியாவில் 70க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயிருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

“80 பேர் உயிரிழந்தபோதும் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம். ஏனெனில் 42 பேர் தொடர்ந்து காணாமல்போயுள்ளனர்” என்று இந்தோனேசிய அனர்த்த தடுப்பு நிறுவனத்தின் பேச்சாளர் ராதித்யா டிஜாட்டி தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்தார்.

“சேறு மற்றும் மோசமான காலநிலை பெரும் சவாலாக மாறியுள்ளது. குப்பைகள் குவிந்து இருப்பது தேடுதல் மற்றும் மீட்புக் குழுவுக்கு இடையூறாக உள்ளது”' என்று இந்தோனேசியாவின் தற்போதைய நிலை குறித்து டிஜாட்டி தெரிவித்தார்.

“மக்கள் புதையுண்டிருக்கலாம் என்று நாம் சந்தேகின்றபோதும் எத்தனை பேர் காணாமல்போயிருக்கிறாரர்கள் என்பது இன்னும் தெளிவின்றி உள்ளது” என்று கிழக்கு புளோரஸ் அனர்த்த நிறுவன தலைவர் அல்போன்ஸ் ஹதா பேதன் தெரிவித்தார்.

மீட்கப்பட்டவர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு உணவு, மருந்து, போர்வைகள் போன்றவை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் இருந்து தனியாகப் பிரிந்து சென்ற நாடு கிழக்கு திமோர். இது திமோர்–லெஸ்தே என்றும் அழைக்கப்படுகிறது. தற்போதைய வெள்ளப்பெருக்கில் கிழக்கு திமோர் நாட்டில் மட்டும் 21 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் திலி அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மழைப் பருவத்தில் இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு வழக்கமான ஒன்றாகும். கடந்த ஜனவரியில் ஜாவாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 40 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் பாதிப்பேர் நிலச்சரிவு அபாயத்துடனே எப்போதும் வாழ்ந்து வருவதாக அந்நாட்டின் பேரிடர் அமைப்பு மதிப்பிடுகிறது.

Tue, 04/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை