அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ரஷ்யா ட்ரம்ப் ஆதரவு பிரசாரம்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாகத் திசை திருப்பும் முயற்சிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அங்கீகாரம் வழங்கியிருக்கக் கூடுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உளவு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க அரசாங்க அறிக்கை இதனைத் தெரிவித்தது.

தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பது தொடர்பில், தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ரஷ்யா பரப்பியதாக அறிக்கை குறிப்பிட்டது.

ஆனால், தேர்தலின் இறுதி முடிவு எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தாலும் பாதிக்கப்படவில்லை என்றும் அது தெரிவித்தது. அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டதாகக் கூறப்படுவதை ரஷ்யா தொடர்ந்து மறுத்துவருகிறது.

தேசிய உளவுப் பிரிவு பணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட 15 பக்க அறிக்கையில், ரஷ்யாவும் ஈரானும் ஜனாதிபதி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டது.

கடந்த நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற தேர்தலுக்கு முன்னதாக, ஜனாதிபதி ஜோ பைடன் குறித்த ஆதாரமற்ற தகவல்களை, ரஷ்யாவோடு தொடர்புடைய தனிநபர்கள் சிலர் பரப்பிவந்ததாக அறிக்கை கூறியது.

மேலும், தேர்தல் நடைமுறைகள் குறித்த நம்பிக்கையைக் கீழறுக்கும் தவறான தகவல்களைப் பரப்பும் முயற்சிகளும் இடம்பெற்றதாக அது தெரிவித்தது.

Thu, 03/18/2021 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை