அசாத் சாலிக்கு மூன்று நாட்கள் தடுப்புக்காவல்

- விசாரணை நடத்த CID க்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி
- கைதானபோது காரில்  கண்டெடுத்த வெளிநாட்டு  துப்பாக்கி குறித்தும்  தனியான விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள அசாத் சாலி, மூன்று நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று புதன்கிழமை தெரிவித்தது.

அசாத் சாலியிடமிருந்து வாக்குமூலங்கள் பெற்ற பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் அவர் கூறினார்.

அசாத் சாலியின் காரில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் தனியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை,மாவனல்லை புத்தர்சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில் அசாத் சாலிக்கு நேரடியாவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்ப்புகள் இருக்கக்கூடுமென்ற சந்தேகத்தின் பிரகாரமே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும் நேற்று தெரிவித்துள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பிரகாரமே அசாத் சாலி கைதுசெய்யப்பட்டுள்ளார். மாவனல்லை புத்தர்சிலை உடைப்பு விவகாரத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ அசாத் சாலி தொடர்புப்பட்டுள்ளாரென்ற சந்தேகத்தில் அடிப்படையில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஷரீஆ சட்டம் நாட்டின் பொதுச் சட்டத்திற்கு அப்பால்பட்டதென அவர் அண்மையில் கருத்தொன்றையும் வெளியிட்டுள்ளார். அவ்வாறான கருத்துகள் மத அடிப்படைவாதத்தை ஊக்குவிப்பனவாகும். அதனால் நாடு மீண்டும் அடிப்படைவாதத்தை நோக்கி நகரக்கூடும். என்றாலும் புலனாய்வுத்துறையினரின் கோரிக்கையின் பிரகாரம் சட்ட மாஅதிபரின் ஊடாகத்தான் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளும்போதுதான் அவருக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் தொடர்பு உள்ளதா என அறிய முடியும்”என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 03/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை