அநுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் மீண்டும் யாழ். கச்சேரிக்கு

உடனடியாக கொண்டுவர அதிகாரிகளுக்கு அமைச்சர் மஹிந்தானந்த பணிப்பு

யாழ்.கச்சேரியில் நேற்று  நடைபெற்ற கூட்டத்தில்  வைத்து தொலைபேசியூடாக  உத்தரவை பிறப்பித்தார்

 

யாழ்ப்பாணம் கச்சேரியிலிருந்து அநுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தையும் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு உடனடியாக கொண்டு வர வேண்டுமென கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அமைச்சரின் பணிப்புரையையடுத்து காணி ஆவணங்கள் அனைத்தும் யாழ்ப்பாணத்திற்கு உடனடியாக நேற்றே எடுத்து வரப்படுவதாக அதிகாரிகள் அமைச்சருக்குத் தெரிவித்தனர்.

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (17) நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது, காணி தொடர்பான பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்பட்டபோது,

யாழ்ப்பாணத்திலிருந்து, ஏனைய இரு மாவட்டங்களுக்குமுரிய காணி ஆவணங்கள் அனைத்தும் கடந்த வாரம் இரவோடு இரவாக அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்டதாக, அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொலைபேசியூடாக கலந்துரையாடிய அமைச்சர், அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட அனைத்து காணி ஆவணங்களையும் உடன் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டதுடன், யாழ் மக்கள் எவ்வாறு அநுராதபுரத்திற்குச் சென்று காணி ஆவணங்கள் தொடர்பாக தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமென்றும் கேள்வி எழுப்பினார்.

சில அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள், மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டதுடன், அனைத்து ஆவணங்களையும் யாழ்ப்பாணத்திற்கு உடனடியாக கொண்டுவருமாறு அனுராதபுரத்திலுள்ள அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஏனைய துறைசார்ந்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதன்போது அதிகாரி ஒருவர், அனுராதபுரத்திலிருந்து காணி ஆவனங்கள் எடுத்துவரப்படுவதாக அமைச்சரிடம் தெரிவித்தார்.

 

யாழ்ப்பாணம் குறூப், சாவகச்சேரி விசேட நிருபர்கள்

Thu, 03/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை