இடமாற்ற கட்டளையினை உடன் செயற்படுத்தவும்

- கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்

கிழக்கு மாகாண சேவை உத்தியோகத்தர்களின்  2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற கட்டளையினை உடனடியாக செயற்படுத்துமாறு, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திசாநாயக்க அறிவித்துள்ளார்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சகல செயலாளர்களுக்கும், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு முதலாவது நினைவூட்டல் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடமாற்றக் கட்டளைக்கு அமைவாக பதில் உத்தியோகத்தர்கள் கடமைக்கு அறிக்கை இடும் வரை காத்திராமல் இடமாற்றக் கட்டளைக்கு அமைவாக உத்தியோகத்தர்களை தங்கள் அலுவலகங்களிலிருந்து உடனடியாக விடுவிக்குமாறு முதலாவது நினைவூட்டல் கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இணைந்த சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் மார்ச் மாதம் 01ம் திகதியிலிருந்து மீளச் செயற்படுத்துமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் 2021ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தின் கீழ் இடமாற்றம் பெற்று விசேட காரணங்களின் பேரில் இடமாற்றம் ஒத்தி வைக்கப்பட்ட மற்றும் இரத்துச் செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் தவிர ஏனைய இடமாற்றம் வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் தனது புதிய சேவை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டுமெனவும், பல காரணங்களை சுட்டிக்காட்டி, இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக தமது காரியாலயங்களில் வைத்திருப்பதற்கு திணைக்களத் தலைவர்கள் செயற்படாதிருத்தல் வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள், படவினைஞர் உத்தியோகத்தர்கள், சாரதிகள் ஆகியோருக்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஒலுவில் விசேட நிருபர்

Mon, 03/29/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை