வெனிசுவேல ஜனாதிபதியின் ‘பேஸ்புக்’ கணக்கு முடக்கம்

கொரோனா தொற்று பற்றி தவறான தகவலை வெளியிட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிகொலஸ் மடூரோவின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றைக் குணப்படுத்தும் உறுதிப்படுத்தப்படாத வழிமுறை ஒன்றை மடூரோ ஆதாரம் ஏதுமின்றித் தமது கணக்கில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்பட்டது.

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் அவர் கார்வட்டிவிர் என்னும் கஷாயம், எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் கொவிட்–19 நோயை குணப்படுத்தும் என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அதற்கு அறிவியல்பூர்வமான சான்றுகள் ஏதும் இல்லை என மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.

போலித் தகவல்களுக்கெதிரான பேஸ்புக் நிறுவனக் கோட்பாடுகளை மீறியதால், அந்த கஷாயத்தை அருந்துமாறு மக்களை ஊக்குவிக்கும் அவரது வீடியோ பதிவு நீக்கப்பட்டது.

மேலும், பேஸ்புக் கோட்பாடுகளைப் பல முறை மீறியதால், ஜனாதிபதி மடூரோவின் கணக்கு 30 நாட்களுக்கு முடக்கப்பட்டது. அந்தக்காலக்கட்டத்தில் எதையும் பதிவேற்ற முடியாது.

கொவிட்–19 நோய்த்தொற்றை குணப்படுத்த, இப்போதைக்கு மருந்து ஏதும் இல்லை என்ற உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலுக்கு ஏற்பத் தனது கோட்பாடு வரையப்பட்டுள்ளதாக பேஸ்புக் குறிப்பிட்டது.

Mon, 03/29/2021 - 16:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை