அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை நெதர்லாந்தும் இடைநிறுத்தியது

பக்க விளைவு பற்றிய அச்சம் காரணமாக ஒக்ஸ்போர்ட்–அஸ்ட்ராசெனகா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பயன்பாட்டை நெதர்லாந்தும் இடைநிறுத்தியுள்ளது.

இந்தத் தடுப்பூசிக்கும் இரத்தம் உறையும் பிரச்சினைக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பாவின் மருத்துவ ஒழுங்குமுறை அமைப்பு குறிப்பிட்டுள்ளன.

எனினும் முன்னெச்சரிக்கையாக இந்தத் தடுப்பூசி பயன்பாடு குறைந்தது மார்ச் 29 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக நெதர்லாந்து அரசு குறிப்பிட்டுள்ளது.

நோர்வேயில் இரத்த உறைவு பற்றிய செய்தி வெளியானதை அடுத்து அயர்லாந்தும் இவ்வாறான நடவடிக்கையை எடுத்தது.

இதில் நோர்வேயில் அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசிகளை அண்மையில் போட்டுக்கொண்ட மூன்று சுகாதார ஊழியர்கள் இரத்தப்போக்கு, இரத்த உறைவு, குறைந்த இரத்த பிளேட்லட் அணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தவிர, டென்மார்க், நோர்வே, பல்கேரியா, ஐஸ்லாந்து, கொங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் தாய்லாந்து நாடுகள் ஏற்கனவே அஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்து போடுவதை இடைநிறுத்தியது. இத்தாலி மற்றும் ஆஸ்திரியா உட்பட மேலும் சில ஐரோப்பிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு மருந்தின் ஒருசில வகைகளை பயன்படுத்துவதை இடைநிறுத்தியது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனில் சுமார் 17 மில்லியன் பேர் தடுப்பு மருந்து பெற்றிருக்கும் நிலையில் 40க்கும் குறைவான இரத்த உறைவு சம்வங்களே பதிவாகி இருப்பதாக அஸ்ட்ராசெனகா தெரிவித்துள்ளது.

இரத்த உறைவு சம்பவங்கள் தொடர்பில் மீளாய்வு செய்திருக்கும் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம், தடுப்பு மருந்தை தொடர்ந்து வழங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களில் இந்த இரத்த உறைவு சம்பவங்கள் சாதாரண பொதுமக்களிடம் காணப்படும் எண்ணிக்கையை விடவும் அதிகமாக இல்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்தால் இரத்தம் உறையும் சம்பவம் ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று பிரிட்டன் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் நிறுவனமும் குறிப்பிட்டுள்ளது. மக்கள் தடுப்பு மருந்தை போட்டுக்கொள்ளும்படியும் அது வலியுறுத்தியுள்ளது.

Tue, 03/16/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை