13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்க இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும்

வடக்கு, கிழக்கு விஜயத்தின் போது இந்திய உயர்ஸ்தானிகர்

இந்தியா, 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு தொடர்ந்தும் வலியுறுத்துமென இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர் அங்கு பல அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதற்கமைய இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் 13ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் அவர் சந்தித்திருந்தார்.

அத்துடன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலானான பிரதிநிதிகளையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரையும் அவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த சகல சந்திப்புகளிலும் தமிழ்த் தலைவர்கள், மாகாணத்தில் இந்திய நன்கொடையின் கீழான அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்களின் அடிப்படையில் மேலதிக பொருளாதாரம், முதலீடு மற்றும் மேலதிக உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவற்றுக்கான உதவியை கோரியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இந்த விடயங்களில் தனது தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குமென உயர் ஸ்தானிகர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாலும் மக்களாலும் முன்வைக்கப்படும் தேவைகளுக்கு அமைவாக மாகாணங்களின் அபிவிருத்திக்காக இந்தியா நீண்டகாலமாக ஒத்துழைப்பை வழங்குவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கௌரவம், சமாதானம், நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றுக்கான தமிழ் சமூகத்தின் நியாயபூர்வமான அபிலாசைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் ஈடுபாடு தொடர்பில் நினைகூர்ந்த இந்திய உயர் ஸ்தானிகர், ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஒன்றின் ஊடாக அவற்றை உறுதிப்படுத்துவது நாட்டின் சமாதானம் நல்லிணக்கம் வினைத்திறன் மிக்க முன்னேற்றம் மற்றும் ஐக்கியம் ஆகியவற்றுக்கு பங்களிப்பு வழங்குமெனவும் குறிப்பிட்டார்.

Tue, 03/16/2021 - 07:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை